/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம சபை கூட்டத்தில் தீ குளிக்க முயன்ற பெண்
/
கிராம சபை கூட்டத்தில் தீ குளிக்க முயன்ற பெண்
ADDED : அக் 12, 2025 10:40 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆவலப்பம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டியைச் சேர்ந்தவர் விக்டோரியா மகாராணி, கணவர் வேலாயுதம். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த 2024ம் ஆண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பித்திருந்தார். இது குறித்து கடந்த ஆண்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் இத்திட்டத்தில் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் குடியிருந்த ஓட்டு வீட்டை இடித்து, புதிதாக வீடு கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், திடீரென இவருக்கு வீடு ஒதுக்கீடு இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த விக்டோரியா கிராம சபை கூட்டத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். அங்கு போலீஸ் இருந்ததால் இவரை தடுத்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் தெரிவித்த போது, ஒரு சில மக்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், விக்டோரியா மகாராணியும் விண்ணப்பித்தார்.
அதன்பின் ஒன்றிய அதிகாரிகள், இத்திட்டத்தில் விண்ணப்பித்திருந்தவர்கள் ஒவ்வொருவரின் வீடாக ஆய்வு செய்ததில், இவரின் வீடு நன்றாக இருந்ததால் இத்திட்டத்தில் வீடு கட்டுவதை நிராகரித்தனர். மேலும், குடிசை வீடுகள் மற்றும் காலி இடம் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.