/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டைகளில் துார்வாரும் பணி தீவிரம்
/
குட்டைகளில் துார்வாரும் பணி தீவிரம்
ADDED : ஆக 04, 2025 08:22 PM

மேட்டுப்பாளையம்; நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, குட்டைகள், தடுப்பணைகளில் தூர் வாரும் பணிகள் நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், ஆற்றுப் பாசனம், வாய்க்கால் பாசனம் ஏதுமில்லை. கிணற்று தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வேளாண் பொறியியல் துறை, குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளை தூர் எடுக்க முடிவு செய்துள்ளது. வேளாண் பொறியியல் துறை, கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில், சிறுமுகை அருகே உள்ள, பெத்திக்குட்டை, இரும்பறை, தேரங்கிணறு, நீலங்கிணறு, தேசியூர் ஆகிய இடங்களில் உள்ள ஐந்து குட்டைகளை தூர் எடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் இந்த குட்டைகளுக்கு வரும் பள்ளங்களில் கட்டி உள்ள, 15 தடுப்பணைகளையும் தூர் எடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் தங்கம், உதவி பொறியாளர் நிவேதா ஆகியோர் மேற்பார்வையில் பணிகள் நடைபெறுகின்றன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,' குட்டைகள், தடுப்பணைகளில் தூர் வாரும் பணிகள் நடைபெறுகின்றன. குட்டைகள், தடுப்பணைகள் ஆழப்படுத்தும்போது, மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர், அதிக அளவில் தேங்கி நிற்கும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய கிணறுகளுக்கு தொடர்ந்து நீரூற்று கிடைக்கும். இதற்காக குட்டைகள், தடுப்பணைகளில் தூர் எடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன,' என்றனர்.