UPDATED : அக் 27, 2026 06:42 PM
ADDED : அக் 27, 2026 06:36 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், சம்பளம் வழங்காததால் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சியில், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில், 86 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள், வீடு, வீடாக சென்று, கொசுக்களை ஒழிக்க மருந்து தெளித்தல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், முறையாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி, நேற்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியாளர்கள் கூறுகையில், ‘மாதந்தோறும் சம்பளம் முறையாக வழங்க வேண்டும். கடந்த மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கவில்லை. இதனால், பொருளாதார நெருக்கடி சமாளிக்க முடியாத நிலை உள்ளது. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்,’ என்றனர்.
இதையடுத்து, நகராட்சி நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால், பணியாளர்கள், சம்பளம் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
