ADDED : மார் 21, 2025 10:54 PM
மேட்டுப்பாளையம்; சம்பள பாக்கியும், போனஸ் வழங்கக் கோரியும், ஆலையை உடனடியாக இயக்க கோரி, கே.ஜி., டெனிம் கம்பெனி முன், சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே, ஜடையம்பாளையம் ஊராட்சியில் கே.ஜி., டெனிம் கம்பெனி உள்ளது. கம்பெனி சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது.
தொழிலாளர்களுக்கு சம்பளமும், போனஸும் வழங்காமல் நிர்வாகம் உள்ளது. கம்பெனியில் வேலை செய்த தொழிலாளர்கள், நேற்று காலை நால்ரோடு பகுதியில் இருந்து சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுடன் ஊர்வலமாக வந்தனர். கே.ஜி., டெனிம் கம்பெனி கேட் அருகே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். நிலுவையில் உள்ள சம்பளம், போனஸ் ஆகியவை வழங்க கோரியும், ஆலையை உடனடியாக இயக்க கோரியும் கோஷம் எழுப்பினர்.