/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக தேனீ தின விழா: இன்று கொண்டாட்டம்
/
உலக தேனீ தின விழா: இன்று கொண்டாட்டம்
ADDED : மே 19, 2025 11:52 PM
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், இன்று உலக தேனீ தினவிழா கொண்டாடப்படுகிறது.
தேனீக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அன்டன் ஜான்சா என்ற, 18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தேனீ வளர்ப்பாளரை நினைவு கூரும் வகையில், அவரின் பிறந்த நாளான மே 20ம் தேதி, உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு, 'தேனீக்கள் - இயற்கை அளித்த ஊட்டச்சத்து உற்பத்தியாளர்கள்' என்ற தலைப்பின் வாயிலாக, உணவு மற்றும் ஊட்டச்சத்து உற்பத்தியில் தேனீக்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, முக்கிய நோக்கமாக உள்ளது.
தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், பூச்சியியல் துறை சார்பில், இன்று, உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. இதில், தேனீக்களின் அடிப்படை தகவல்கள், தேன் உற்பத்தி மற்றும் அறுவடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேனீ மெழுகு வாயிலாக சிலைகள் மற்றும் சோப்பு தயாரிக்கவும், நெல்லித்தேன், தேன் குல்கந்து ஆகியவற்றின் தயாரிப்பு செயல்முறை விளக்கம் வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு, தேனீக்கள் சார்ந்த பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகள், இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் விழாவில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.