/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இளம் கன்று பயமறியாது' அதிவேக பைக்கில் பறந்து போக்குவரத்து விதிமீறல்; விபத்துக்களில் சிக்கி பலியாகும் இளைஞர்கள்
/
'இளம் கன்று பயமறியாது' அதிவேக பைக்கில் பறந்து போக்குவரத்து விதிமீறல்; விபத்துக்களில் சிக்கி பலியாகும் இளைஞர்கள்
'இளம் கன்று பயமறியாது' அதிவேக பைக்கில் பறந்து போக்குவரத்து விதிமீறல்; விபத்துக்களில் சிக்கி பலியாகும் இளைஞர்கள்
'இளம் கன்று பயமறியாது' அதிவேக பைக்கில் பறந்து போக்குவரத்து விதிமீறல்; விபத்துக்களில் சிக்கி பலியாகும் இளைஞர்கள்
ADDED : ஏப் 14, 2025 04:24 AM

மேட்டுப்பாளையம்: அதிக சி.சி., திறன் பைக்குகளை பெற்றோர்களிடம் இருந்து அடம்பிடித்து அழுது வாங்கும் இளைஞர்கள், போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக இயக்கி, விபத்துக்களில் சிக்குகின்றனர். 'அடம்பிடித்தாலும், அதிவேக பைக்குகள் வாங்கி தர வேண்டாம்' என, விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்களின் அம்மாக்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்தில், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே, ஆட்டோ மீது பைக் மோதியதில் ஒரே பைக்கில் பயணம் செய்த, பள்ளி மாணவர்கள் இருவர் உட்பட 3 பேர் பலியாகினர். இது மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
தனது மகன்களுக்கு நடந்தது, வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பிள்ளைகள் அழுது அடம்பிடித்தாலும், அதிக சி.சி. திறன் கொண்ட பைக்குகளை வாங்கி தராதீங்க என இந்த விபத்தில் பலியானவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
'போலீஸ் ஆக வேண்டிய மகன்'
விபத்தில் இறந்த பள்ளி மாணவன் நகுலன் என்பவரது அம்மா நதியா நம்மிடம் கூறியதாவது:-
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு, அடுத்து கல்லுாரி படிப்பில் சேர இருந்தான், எனது மகன் நகுலன். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, போலீஸ் ஆக வேண்டும்; உயர் அதிகாரியாக வர வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பான்.
நான் நுால் கம்பெனியில் வேலை செய்கிறேன். அவனது அப்பா அரிசி குடோனின் வேலை செய்கிறார். போலீஸ் ஆக வேண்டிய என் மகன் இப்படி போயிட்டான். என் மகனுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. அவனது கனவு நனவாகாமலே போய்விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
'அழுத பிள்ளைக்கு இரங்கினேன்'
விபத்தில் பலியான நிஜூ என்பவரின் அம்மா ராஜேஸ்வரி கூறியதாவது:-
பெற்றோர்களே, பிள்ளைகள் எவ்வளவு அழுதாலும் இது போன்ற வேகமான பைக்குகளை வாங்கி தராதீர்கள். என் மகன் பைக் கேட்டு அழுதான். நான் இரக்கப்பட்டு அதிவேக பைக் வாங்க சம்மதித்தேன். இன்று அதுவே, அவனுக்கு எமனாக மாறிவிட்டது. இதுவரை நான்கு பைக்குகள் மாறி, மாறி வாங்கிவிட்டான். என் மகன் இனி திரும்ப வரமாட்டான். இளைஞர்களுக்கு அதிவேக பைக்குகளை வாங்கி கொடுக்காதீங்க.இவ்வாறு அவர் கூறினார்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அலட்சியமாக அதிவேகமாக பைக் ஓட்டுவதால், ஓட்டுபவர்களுக்கு மட்டுமல்ல ரோட்டில் செல்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்' என்றனர்.
ஹெல்மெட் அவசியம்
அதிவேக பைக்குகளை பெற்றோர் வாங்கி தரக்கூடாது. பைக்குகளில் வாகன வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தினால் நன்றாக இருக்கும். இளம் கன்று பயமறியாது. பெற்றோர் நீங்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். படிக்க செல்ல மாணவர்கள் கல்லுாரி பஸ்களிளோ, அல்லது பொது போக்குவரத்துகளை பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது, ஹெல்மெட் அணிவது அவசியம். அதிவேகத்திலும், மதுபோதையிலும் பைக் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். -
- சின்ன காமணன்,
இன்ஸ்பெக்டர்,
மேட்டுப்பாளையம்