/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம சபையில் கருத்தை பதிவு செய்ய இளைஞர்களே வாருங்கள்! வாக்காளர்கள் அனைவரும் முன்வாருங்க!
/
கிராம சபையில் கருத்தை பதிவு செய்ய இளைஞர்களே வாருங்கள்! வாக்காளர்கள் அனைவரும் முன்வாருங்க!
கிராம சபையில் கருத்தை பதிவு செய்ய இளைஞர்களே வாருங்கள்! வாக்காளர்கள் அனைவரும் முன்வாருங்க!
கிராம சபையில் கருத்தை பதிவு செய்ய இளைஞர்களே வாருங்கள்! வாக்காளர்கள் அனைவரும் முன்வாருங்க!
ADDED : ஜன 25, 2024 12:02 AM
பொள்ளாச்சி : குடியரசு தினமான நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்கள், கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட, 118 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், 2023--24ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
கொசுக்கள் வாயிலாக பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் வாயிலாக, 2024-25ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம், துாய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
கூட்டத்தை திறன்பட நடத்தும் வகையில் ஒன்றிய அலுவலங்களில் இருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேநேரம், கிராம சபை கூட்டங்களில், அந்தந்த ஊராட்சி பகுதிகளில் வசிக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கியம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு, ஒவ்வொரு முறை நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தின் போது, நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், முழுமையாக பூர்த்தியடையாமல் இருப்பதே காரணமாகும்.கூட்டத்தில் பெரும்பாலும், 30 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் கலந்து கொள்ளும் நிலையில், இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அதிகாரம் குறித்து எவரிடமும் விழிப்புணர்வு கிடையாது.
மேலும், வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள், ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்களிடம் கையெழுத்து பெற்று, கிராம சபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதாக பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுரிமை உள்ளவர்கள் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், கிராம சபை கூட்டம் களைகட்டும்.
ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
கிராம சபை கூட்டத்தில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
சட்டசபை, லோக்சபா தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும், அனைத்து நீதிமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனிநபர் உரிமை போன்ற விஷயங்களை மீறுவதாக தீர்மானங்கள் இருக்கக் கூடாது. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை ஊராட்சித் தலைவரோ, அலுவலர்களோ நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என, முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.கிராம இளைஞர்கள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி, தொடர்ந்து கண்காணிப்பதன் வாயிலாக கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைபடுத்தலாம்.
எனவே, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.