/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்திற்கு 10 புதிய திட்டங்கள்
/
கடலுார் மாவட்டத்திற்கு 10 புதிய திட்டங்கள்
ADDED : பிப் 22, 2025 07:25 AM

கடலுார்; கடலுாரில் நடந்த விழாவில், பண்ருட்டியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உட்பட 10 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
கடலுாரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
கடலுார் மாவட்டமும், நாகை மாவட்டமும் இணையும் கொள்ளிடத்தில் 58 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டியது தி.மு.க., அரசு. பண்ருட்டியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி மற்றும் சோனங்குப்பம், சொத்திக்குப்பம், தாழங்குடா பகுதியில் ஆற்றின் மீது மேம்பாலம். உறையூரில் துணை மின் நிலையம். நெல்லிக்குப்பத்தில் புதிய பஸ் நிலையம், பண்ருட்டியில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், கடலுாரில் எஸ்.பி., அலுவலக கட்டடம், நீதிமன்ற கட்டடம், தாலுகா அலுவலகம், குறிஞ்சிப்பாடியில் தாலுகா அலுவலக கட்டடம், குறிஞ்சிப்பாடியில் புதிய மருத்துவமனை, திருப்பாதிரிப்புலியூரில் சுரங்க பாதை, ரயில்வே மேம்பாலம் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் இதேபோன்று ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் புதிய பஸ் நிலையம், பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்பாட்டு பணி, கடலுார் அண்ணா பாலம் கெடிலம் ஆற்றில் புதிய மேம்பாலம், சிதம்பரம் கூட்டுக்குடிநீர் திட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் கடலுார் தாலுகாவில் பரவனாற்றின் குறுக்கே அரிவாள் மூக்கு திட்டம், 81.12 கோடியில் புதிய கால்வாய் அமைக்கப்படுகிறது.
காட்டுமன்னார்கோவிலில் தாலுகா அலுவலகம், குறிஞ்சிப்பாடி பெருமாள் ஏரி 119.71 கோடியில் துார்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி, திட்டக்குடியில் 33 கோடியில் புதிய கால்நடை தீவன ஆலை, காட்டுமன்னார்கோவிலில் இளையபெருமாள் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில் 77 மருத்துவ உட்கட்டமைப்புகள், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 125 உட்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வர் சாலை மேம்பாடு திட்டத்தில் 783 கி.மீ., துார சாலைகள், 590 கி.மீ., துார நகர்ப்புற சாலைகள், 778 கி.மீ., துாரம் நெடுஞ்சாலைத்துறை சாலைகள், 50 பாலங்கள் திட்டமிட்டு 39 பாலங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 1044 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு, 97 கோவில்களில் குடமுழக்கு நடந்துள்ளது.
இந்த விழாவின் மூலம் கடலுார் மாவட்டத்திற்கு 10 திட்டங்கள் புதியதாக அறிவிக்கிறேன். அதில், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 130 கோடியில் வெலிங்டன் ஏரி கரைகளை பலப்படுத்துவது, வாய்க்கால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடலுார் மாநகராட்சி மஞ்சக்குப்பம் மைதானம் 35 கோடியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்படுத்தப்படும். பண்ருட்டி தொகுதியில் 15 கோடியில் அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும். புவனகிரி, சிதம்பரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் முட்லுாரில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை உள்ள 2 வழி சாலை 4 வழி சாலையாக 50 கோடியில் மேம்படுத்தப்படும். கெடிலம் ஆற்றங்கரையில் செம்மேடு, சிறுவாத்துார் பகுதியில் 36 கோடியில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
எம்.புதுாரில் இருந்து திருவந்திபுரம் செல்லும் சாலை 7 கோடியில் மேம்படுத்தப்படும். குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலக கட்டடம் 6.50 கோடியில் கட்டப்படும். காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி பகுதி விவசாய நிலங்கள் பசான வசதிபெற
63.50 கோடியில் வீராணம் ஏரி மேம்படுத்தப்படும். கடலுார் தாலுகாவில் பருவமழை வெள்ள பாதிப்பை தடுக்க தென்பெண்ணை ஆற்றில் 57 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சிதம்பரத்தில் உள்ள ராஜேந்திரன் நினைவிடம் புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.