/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் வசதி... விருதையில் பயணிகள் எதிர்பார்ப்பு
/
ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் வசதி... விருதையில் பயணிகள் எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் வசதி... விருதையில் பயணிகள் எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் வசதி... விருதையில் பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 24, 2025 07:14 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று வர பஸ் வசதி ஏற்படுத்த ரயில்வே மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்கு ரயில்வே கோட்டத்தில், சென்னை-திருச்சி, கடலுார்-சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் முக்கிய சந்திப்பு. பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், சரக்கு ரயில்கள் மற்றும் வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சஃபார் உட்பட பல மாநிலங்களை இணைக்கும் சிறப்பு ரயில்கள்; வாராந்திர சிறப்பு ரயில்கள் என, 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை உட்பட பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கல்வி, மருத்துவம், வணிகம் போன்ற தேவைகளுக்கு பயனடைகின்றனர்.
தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் செல்வதால், எந்நேரமும் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், ரயில் பயணிகள் நலன் கருதி அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் 9.5 கோடி ரூபாயில் அலங்கார முகப்பு, நவீன டிக்கெட் கவுண்டர், ஓய்வறை, சிக்னல் அறைகள், கழிவறை, குடிநீர், நடைமேடைகளில் மேற்கூரை, சிசிடிவி., கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. இதனை நேற்று முன்தினம் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
விருத்தாசலம்-உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இடதுபுறமாக உள்ள ரயில் நிலையத்திற்கு, ரயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதனால் இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து பெண் பயணிகள், மாணவிகளுக்கு பாதுகாப்பு குறைவு ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், ரயில்வே ஸ்டேஷன் நிலையம் புதுப்பிக்கப்பட்டதும் உளுந்துார்பேட்டை மார்க்கமாக செல்லும் அரசு பஸ்களில், குறிப்பிட்ட பஸ்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு உள்ளே வந்து செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு எந்த நேரத்திலும் எளிதில் பயணிக்கலாம் என, பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால், ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ்கள் வந்து செல்லும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பெண் பயணிகள் 200 மீட்டர் துாரம் வந்து பஸ் ஏறும் அவலம் உள்ளது. எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் நிலையத்துக்கு அரசு டவுன் பஸ்கள்வந்து செல்ல மாநில போக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பி, பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் அச்சம்
ரயில் நிலைய முகப்பில் அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. போதைதலைக்கேறிய மதுப்பிரியர்கள் ஆபாசமாக பேசுவது, சண்டையிட்டுக் கொள்வது வாடிக்கையாக உள்ளது.
இதனால் ரயில் நிலையத்துக்கு செல்லும் பெண் பயணிகள், மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம்முன்வராத நிலையில், ரயில் நிலையத்துக்கு பஸ் இயக்கினால், மதுப்பிரியர்களின் பிரச்னையில் இருந்து பயணிகள் தப்பிக்க முடியும்.