ADDED : ஜூலை 21, 2026 05:20 PM
கடலுார், ஜூலை 22– மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், கணக்கீட்டாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 4,748 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் தொடர்பான கூட்டம் நடந்தது.
இதில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு– 2027,ன், ஒரு பகுதியாக, பொதுமக்கள் தாங்களே தங்களது விவரங்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு பணி வரும், 31ம் தேதி வரை நடக்கிறது. அக்.,1ம் தேதி முதல் 30ம் தேதி வரை வீடு வாரியாக வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், வீட்டு எண், குடும்பத் தலைவரின் பாலினம், குடிநீரின் ஆதாரம், இணையதள வசதி, குடும்பத்தில் நபர்களின் எண்ணிக்கை, சமையலுக்கான எரிபொருள் உள்ளிட்ட, மொத்தம், 33 கேள்விகள் கேட்கப்படும்.இதில், 4,748 கணக்கீட்டாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை எளிமைப்படுத்தும் விதமாக இந்திய மக்கள் தொகை இயக்குனரகம் சுயகணக்கெடுப்பு என்ற வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்து பங்கேற்கலாம்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இணையதளத்தின் மூலம் தனித்துவமான குறியீட்டு எண் வழங்கப்படும். இந்த குறியீட்டு எண்ணை, வரும், ஆகஸ்ட் 1 முதல் 30ம் தேதி வரை வீடுகளுக்கு வருகை தரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் விவரங்களை சுய கணக்கெடுப்பு மூலம் பதிவேற்றிட தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி, சுயகணக்கெடுப்பு விவரங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
