ADDED : மே 21, 2024 05:16 AM
நெல்லிக்குப்பம்: தினமலர் செய்தி எதிரொலியாக, கடலுார் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல், மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனாலும், கடலுார் மாவட்டத்தில், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதையடுத்து, கடலுார் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ஆய்வு செய்து கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமாரை பொறுப்பு அலுவலராக நியமித்து, குழு அமைத்து, கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இவருக்கு மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

