/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெடிலம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானம் துவக்கம்: வரும் ஆண்டில் பணி முடியும் என எதிர்பார்ப்பு தீவிரம்
/
கெடிலம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானம் துவக்கம்: வரும் ஆண்டில் பணி முடியும் என எதிர்பார்ப்பு தீவிரம்
கெடிலம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானம் துவக்கம்: வரும் ஆண்டில் பணி முடியும் என எதிர்பார்ப்பு தீவிரம்
கெடிலம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமானம் துவக்கம்: வரும் ஆண்டில் பணி முடியும் என எதிர்பார்ப்பு தீவிரம்
UPDATED : மே 23, 2025 05:09 AM
ADDED : மே 22, 2025 11:31 PM

தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை குறைப்பதற்காக முடிந்தவரை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால் போன்ற பகுதியில் இருந்து சென்னை செல்ல கடலுார் வழியாக செல்லும் சாலையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் கிழக்கு கடற்கரை சாலையும் 4 வழி சாலையாக மாற்றப்பட்டு வருகின்றது.
இதே போன்று, புதுச்சேரி-கடலுார் சாலை மட்டும் 2 வழி சாலையாகவும், சில இடங்களில் ஒரு வழி சாலையாகவும் உள்ளன. அதன் காரணமாக அதிகளவு விபத்து ஏற்பட்டு வருவதால் அனைத்து பகுதிகளிலும் குறைந்த பட்சம் இரு வழி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடலுார் பெண்ணையாற்றில் புதியதாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. கெடிலம் ஆற்றில் அண்ணா மேம்பாலம் என்ற ஒரே பாலம் மட்டுமே பயன்பட்டு வந்தது. இந்நிலையில் 2 பாலம் அவசியம் எனக் கருதி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. அதன்பேரில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு கெடிலம் ஆற்றில் மற்றொரு பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்ட 22.25 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அதன்படி கெடிலம் ஆற்றின் குறுக்கே இருந்த பழைய இரும்பு பாலத்தை இடித்து அகற்றப்பட்டது. பின், அதே இடத்தில் மீண்டும் கடந்த 24.1.2024ம் ஆண்டு பாலம் கட்டுமானப் பணி துவங்கியது.
பாலம் கட்டுமானப் பணி துவங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை தரைப்பகுதியில் இருந்து பில்லர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதற்கு மேல்தளம் போடும் பணிக்காக கம்பி கட்டும் பணி நடந்து வருகிறது.
பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் வரும் ஆண்டிற்குள் கட்டுமானப்பணி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'நெடுஞ்சாலைகளில் விபத்தை குறைப்பதற்காக போவதற்கு ஒரு பாலமும், வந்து செல்வதற்கு ஒரு பாலமும் என்ற கணக்கில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பாலம் கட்டுமான பணி வரும் ஆண்டில் நிறைவடையும். பாலம் கட்டப்படுவதால் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை அகலப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. தற்போது புதுச்சேரி முள்ளோடை முதல் சிப்காட் புறவழிச்சாலை இணையும் இடம் வரை மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மஞ்சக்குப்பம் பகுதி சாலையில் ஆக்கிரமிப்புகள் பெரிய அளவில் இல்லை. சொந்தமான கட்டடத்தை ஆர்ஜிதம் செய்து இடித்து அகலப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை' என்றார்.