ADDED : செப் 11, 2024 11:30 PM

விருத்தாசலம், : ''இந்தியாவில் மதமாற்றம் என்பது ஒரு தேசிய அபாயமாக நடந்து கொண்டிருக்கிறது'' என தமிழக பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறினார்.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வீரத்துறவி ராமகோபாலனால் ஒரு சிலையை வைத்து துவங்கப்பட்டது. இன்று இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் 10 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
ஜாதி, மதம் கடந்து ஒற்றுமைக்காக கொண்டாடப்படும் விழா விநாயகர் சதுர்த்தி மட்டுமே. இந்துக்கள், தமிழர்கள் கூடுகிறோம் என்பதற்காக இதனை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.
2018ல் ஒரு அரசாணை போட்டனர். அதை பின்பற்றினால் விநாயகரே வந்தாலும், அவருக்கு சிலை வைக்க முடியாது. புது பிள்ளையாரை வைக்க முடியாது என தமிழக காவல்துறை கூறுகிறது. ஆனால் ஆண்டுதோறும் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் அதிகரித்து தான் வருகிறது. சட்டத்துக்கு மேல் யாரும் கிடையாது.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கேட்பவர்களை காவல்துறை துன்புறுத்துகிறது. கஞ்சா, கள்ளச்சாராயம் விற்போரை விட்டு விடுகிறார்கள். விநாயகர் சிலை ஊர்வலங்களால் மக்கள் பாதிக்கிறார்கள் என காவல்துறை கூறுகிறது. எங்களை பிரித்து வைப்பதே போலீசார் தான்.
மதமாற்றம் பேய் போல பரவி கொண்டிருக்கிறது. பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு நின்றால் ஏசு அழைக்கிறார் வாங்க என்கிறார்கள். ஏசு அன்பை தான் பரப்பச் சொன்னார்; மதத்தை அல்ல.
கும்பகோணம் திருபுவனத்தில் மதம் பரப்ப இஸ்லாமியர்கள் நோட்டீஸ் கொடுத்ததை எதிர்த்து கேள்வி கேட்ட ராமலிங்கம் அன்றைய தினமே வெட்டிக் கொல்லப்பட்டார். மதமாற்றம் என்பது ஒரு தேசிய அபாயமாக நடந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் எந்த மதத்திற்கும் எதிராக பேசவில்லை. ஆனால் மதமாற்றத்திற்கு எதிராக பேசுகிறோம். நீங்கள் உங்கள் மதத்தை பின்பற்றுங்கள். எங்கள் தர்மத்தின், இந்த மண்ணின் நாகரீகத்தின், பண்பாட்டில் எங்களை பயணிக்க விடுங்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்துக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் சொத்து சேர்க்க முடியாது என நினைக்க வேண்டாம். நீங்கள் நிறைய மக்கள் செல்வங்களை பெற்று, இந்த தேசத்திற்காக அர்ப்பணியுங்கள்.
இவ்வாறு, அஸ்வத்தாமன் பேசினார்.

