சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த தேவன்குடி ஊராட்சி, புதுப்பேட்டையில் ஆக்கிரமிப்பில் இருந்த பெரியகுளம் துார்வாரி மரக்கன்றுகள் நடப்பட்டது.
புதுப்பேட்டை கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள பெரிய குளம் ஆக்கிரமிப்பால் சுருங்கி ஒரு ஏக்கர் அளவு குறைந்தது. இதனால் மழைகாலங்களில் குளத்தில் தண்ணீரை தேக்கி வைத்து கால்நடைகளுக்கும், மக்களுக்கும் பயன்பாடில்லாமல் போனது.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை, கீரப்பாளையம் ஒன்றியம் ஏ.ஜி.ஏ.எம்.டி., திட்டத்தில் ரூ. 4 லட்சத்தி 70 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றி குளம் துார்வாரப்பட்டது. அதில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு, ஊராட்சி தலைவர் சிவகாமசுந்தரி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., மோகன்ராஜ், ஒன்றிய உதவி செயற்பொறியாளர் செல்வம், ஒன்றிய உதவி பொறியாளர் வனிதா, முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், வார்டு கவுன்சிலர்கள் ராஜா, வேல்விழி, ஊராட்சி செயலர் அன்புக்கரசி முன்னிலை வகித்தனர்.
சிதம்பரம் தாசில்தார் ஹேமானந்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
குளத்தினை சுற்றி கொய்யா, நெல்லி, அரலி, புங்கை உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.