ADDED : ஏப் 07, 2024 05:22 AM
கடலுார் : லோக்சபா தேர்தல் பிரசாரம் துவங்கியும், கடலுாரில் கட்சி கொடி, தோரணங்கள் விற்பனை சூடு பிடிக்கவில்லை.
தேர்தல் பிரசாரம், பொதுகூட்டம் என்றாலே முதலிடம் பிடிப்பது அரசியல் கட்சிகளின் கொடிகள், தோரணங்கள் தான். வழக்கமாக தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், கட்சி கொடிகளின் உற்பத்தியும், விற்பனை பரபரப்பாக துவங்கி நடக்கும். இதை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு ஆர்டர் கொடுப்பது வழக்கம்.
தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் சமயங்களில் கடைகளில் கட்சிகளின் கொடிகள், தோரணங்களை வியாபாரிகள் வாங்கி குவித்து வைப்பது வழக்கம். ஆனால், தற்போது பிரசாரம் துவங்கி, தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், கடலுாரில் கட்சி கொடிகள், தோரணங்கள் விற்பனை சூடு பிடிக்கவில்லை. வாங்க ஆளில்லாமல், கடைகளில் குவிந்து கிடக்கிறது.

