/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பு வரையிலான 4 வழிச்சாலை பணி கிடப்பில்: போராட்டத்தில் குதிக்க வியாபாரிகள் முடிவு
/
சேத்தியாத்தோப்பு வரையிலான 4 வழிச்சாலை பணி கிடப்பில்: போராட்டத்தில் குதிக்க வியாபாரிகள் முடிவு
சேத்தியாத்தோப்பு வரையிலான 4 வழிச்சாலை பணி கிடப்பில்: போராட்டத்தில் குதிக்க வியாபாரிகள் முடிவு
சேத்தியாத்தோப்பு வரையிலான 4 வழிச்சாலை பணி கிடப்பில்: போராட்டத்தில் குதிக்க வியாபாரிகள் முடிவு
ADDED : பிப் 23, 2024 12:23 AM

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான 165 கி.மீ., மாநில சாலை, நான்கு வழிச்சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, விக்கிரவாண்டி- சேத்தியாதோப்பு, சேத்தியாத்தோப்பு- சோழபுரம், சோழபுரம் -தஞ்சாவூர் ஆகிய மூன்று பிரிவாக பணிகள் துவங்கியது.
இதில், விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு இடையிலான 66 கி.மீட்டர் பணியை, ரூ. 845.45 கோடிக்கு ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டெக்சர் நிறுவனம் எடுத்து, 2017 ல் பணியை துவக்கியது. பணிக்கான காலம் 24 மாதங்கள் ஆகும். ஆனால், இதுவரையில் முடிக்காமல் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.
ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டெக்சர் நிறுவனம் சிறுபாலம், கல்வெர்ட்டு உள்ளிட்ட பணிகளை சப் கான்ட்ராக்டர்கள் மூலம் பணி செய்தது. ஆனால், சப் காண்ட்ராக்டர்கள் பிரச்னை,நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், கொரோனா காரணமாகபணிகள் தடைபட்டது. ஆனால், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள இந்நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை.
சாலைகள் படுமோசம்
சேத்தியாத்தோப்பு வரையில், சாலை குண்டும், குழியுமாகவும், மேம்பாலம், பைப்பாஸ், சிறுபாலம், கல்வெர்ட் பணிகள் பாதியில் நின்றதால் இரும்புகம்பிகள் துருபிடித்து வீணாகி வருகிறது.
குறிப்பாக பண்ருட்டி - கண்டரக்கோட்டை வரையிலான பகுதியில் சாலை படுமோசமாக உள்ளது. மேலும், வடலுார்- சேத்தியாதோப்பு வரையில் குண்டும், குழியுமான சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. ஒப்பந்த பணிகாலம் முடிந்து, கூடுதலாக 3 ஆண்டுகள் நீடித்தும் பணிகள் இதுவரை முடிக்கவில்லை.
மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பின் காரணமாக, ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டெக்சர் நிறுவனம் நீக்கப்பட்டு, புதிய ஒப்பந்தம் கோரப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) தெரிவித்தது. ஆனால் அதே நிறுவனத்திற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் வரையில் 'ஜரூர்'
விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு ஒப்பந்த பணிக்கு பிறகுதொடங்கப்பட்ட சேத்தியாத்தோப்பு முதல் தஞ்சாவூர் வரையிலான பணிகள் 90 சதவீதம் முடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், வரும் மே மாதத்தில் வி.கே.டி.சாலை பணி முழுமை பெறுவதாக நகாய் சார்பில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு உறுதியளித்திருந்தார்.
ஆனால், விக்கிரவாண்டி- சேத்தியாதோப்பு வரையிலான பணிகள் 60 சதவீதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் எப்படி முடிக்க முடியும் என, கேள்வி எழுந்துள்ளது.
எனவே, சேத்தியாத்தோப்பு வரையிலான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், நகாயை கண்டித்து வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் வீரப்பன் கூறுகையில், வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக நகாய் போடாமல் உள்ளது.
பணியை விரைவில் துரிதபடுத்தாவிடில் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, காடாம்புலியூர், இந்திரா நகர், வடலுார், சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில் மிகபெரிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் வி.கே.டி., சாலை விவகாரம் விஸ்வரூபம் எடுப்பது, மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் பிரச்னையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.