/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 7228 பேர் பங்கேற்பு
/
எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 7228 பேர் பங்கேற்பு
ADDED : டிச 19, 2025 06:22 AM
கடலுார்: எஸ்.ஐ., பணியிடத்திற்கான தேர்வில், 1860 பெண்கள் உட்பட, 7228 பேர் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட உள்ள 1352 பணியிடங்களுக்கான நேரடி சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான தேர்வு வரும், 21ம் தேதி நடக்கிறது.
கடலுார் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, மஞ்சகுப்பம், கடலுார், செயின்ட் ஜோசப் மேல்நிலைபள்ளி, மஞ்சகுப்பம், கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப் பள்ளி, நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, கடலுார், சி.கே.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, கெடிலம் புறவழி சாலை, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம், சி.கே. மேல்நிலைப்பள்ளி, ஜட்ஜ் பங்களா ரோடு, ஆகிய 7 தேர்வு மையங்களில் நடக்கிறது.
கடலுார் மாவட்டத்தில் ஆண்கள் 5,368 பேர் மற்றும் பெண்கள் 1,860 பேர் என மொத்தம் 7228 தேர்வர் கள் தேர்வு எழுத உள்ளனர்.
அன்றைய தினம் காலை பொது எழுத்துத்தேர்வு காலை 10:00 மணி முதல் 12:30 மணிவரை நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 8:30 மணிக்குள் தேர்வு நடைபெறும் ஹாலுக்குள் இருக்க வேண்டும்.
காலை 9:30 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 3:30 மணி முதல், 5:10 மணி வரை நடக்கிறது. பிற்பகலிலும் எழுத்து தேர்வு நடைபெற இருப்பதால், விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு எழுதுபவர்களுக்கு மதிய உணவு அந்தந்த தேர்வு மையங்களில், பணம் கொடுத்து உணவு பெற்றுக் கொள்ளும் வகையில் கேண்டீன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு நுழைவு சீட்டு கொண்டு வரவேண்டும்.
தேர்வர்கள் அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.

