சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை அகற்ற நடவடிக்கை!கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி
சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை அகற்ற நடவடிக்கை!கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி
UPDATED : ஆக 17, 2026 08:55 PM
ADDED : ஆக 17, 2026 08:52 PM

விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக, மாவட்டம் முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கொள்முதல் நிலையங்களில் காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில், சொர்ணவாரி நெல் அறுவடை தீவிரமடைந்த நிலையில், 120க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இங்கு, விவசாயிகள் நேரடியாக நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சேமிப்புக் கிடங்குகளில் இடப்பற்றாக்குறை காரணமாக கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றாமல், அங்கேயே அடுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் மூட்டைகளும் தேக்கமடைந்தன.
சமீபகாலமாக மாலை நேரத்தில் பெய்து வரும் திடீர் மழையால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுடன் திறந்த வெளியில் கொட்டி வைக்கப்பட்ட விவசாயிகளின் நெற்பயிர்களும் நனைந்து வீணாகின.
பல்வேறு இயற்கை இடர்பாடுகளை கடந்து விவசாயிகள் வேளாண் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அறுவடை செய்த நெற்பயிர்களை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் சமீபத்தில் விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், அப்பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்த நெல் மூட்டைகளை சேமித்து வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ரயிலில் நெல் மூட்டைகள் அதன்படி, விருத்தாசலம் எருமனுார், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, வேப்பூர் உட்பட 10க்கும் மேற்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள், வாரந்தோறும் சரக்கு ரயில்கள் வாயிலாக பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு கடந்த 15ம் தேதி சரக்கு ரயில் மூலம் 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், மாவட்டத்தில் தேங்கிய நெல் மூட்டைகள், அடுத்தடுத்த நான்கு வாரங்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதன் மூலம் காலியான சேமிப்பு கிடங்குகளில், கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்பட உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் திறந்தவெளியில் காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பட்டியல் எழுத்தர்கள் கூறுகையில், 'வேப்பூர் அடுத்த டி.புடையூர், விருத்தாசலம் எருமனுார் சாலையில் உள்ள திறந்தநிலை சேமிப்பு கிடங்கு மற்றும் விருத்தாசலம் கிருஷ்ணா, பாலாஜி ரைஸ் மில்; நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் உட்பட 15 இடங்களில் உள்ள கிடங்குகளில் நெல் மூட்டைகள் சேமிக்கப்படுகின்றன.
இவற்றில் தேக்கமடைந்த நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, கொள்முதல் நிலையங்களில் இருந்து சேமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வாரந்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'என்றார்.
