/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க.,வினர் ஆர்வம் தி.மு.க., சுணக்கம்
/
அ.தி.மு.க.,வினர் ஆர்வம் தி.மு.க., சுணக்கம்
ADDED : நவ 12, 2025 07:53 AM
வரும் 2026 சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை அ.தி.மு.க., வரவேற்றுள்ள நிலையில், தி.மு.க., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக, இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் பெயர்களை கொண்டு, கடந்த 4 ம் தேதி முதல், வீடு வீடாக சென்று, அனைத்து விவரங்கள் அடங்கிய, பல்வேறு கேள்விகளுடன் கூடிய, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளில் தேர்தல் ஆணையத்தின் சார்பில், நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி சார்பில், நியமிக்கப்பட்ட முகவர்கள் உடன் சென்று, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது, இறந்த வாக்காளர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வாக்காளர்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க., சார்பில் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தெகுதியில், சிதம்பரத்தில், 260 ஓட்டுச்சாவடி முகவர்கள், காட்டுமன்னார்கோவிலில், 255 ஓட்டுச்சாவடி முகவர்கள், அந்தந் த பகுதியில் பணிகளில் தீவீரம் காட்டி வருகின்றனர்.
மேலும், இது குறித்து, தங்கள் முகவர்களுக்கு, சிதம்பரம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாண்டியன், ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று சந்தித்து, ஆலோசனைகள் வழங்கி, தெளிவாக விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள தீவிர வாக்காளர்கள் திருத்தும் பணிகளுக்கு, துவக்கம் முதலே தி.மு.க.,வினர் எதிர்ப்பு நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகின்றனர்.
மேலும் நேற்று தி.மு.க.,சார்பில், கடலுாரில், எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட்டில், தி.மு.க., வழக்கும் தொடுத்துள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் தீவிர திருத்த பணிகளில், அ.தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தி.மு.க.,வினர் சுணக்கத்தில் இருந்து வருகின்றனர்.

