ADDED : அக் 31, 2025 02:25 AM
வடலூர்: நிலம், பணம் மோசடி செய்த வழக்கில்  10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வடலூர், நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாசம் மனைவி ஜோதி, 73;  இவர் கடந்த 2011ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி குடும்பத்தினரிடமிருந்து  20 சென்ட் நிலத்தை, ரூ,7.5 லட்சம் பணம் கொடுத்து பவர் பத்திரம் பெற்றுள்ளார். இதன் பிறகு பத்திரப்பதிவு நடைபெறாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு, வடலூர் பத்திர எழுத்தர் இளங்கோவன், சரவணன் ஆகியோர் உதவியுடன் ஜோதியின் ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தி, பவர் பத்திரத்தை சின்னத்தம்பி மகள் சிவசங்கரி ரத்து செய்துள்ளார்.
பணம் பெற்ற  நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமல் மோசடி செய்த சின்னத்தம்பி மனைவி ராஜகுமாரி, அவரது குடும்பத்தை சேர்ந்த பழனியம்மாள், முத்துலட்சுமி, சத்தியவதி, சிவானந்தம், சிவசங்கரி, தட்சிணாமூர்த்தி, ராஜரத்தினம் ஆகியோர் மீதும், மோசடிக்கு உதவிய ஆவண எழுத்தர்கள் இளங்கோவன், சரவணன் என மொத்தம், 10 பேர் மீது வடலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

