/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையை தலைமையாக கொண்டு புதிய தாலுகா சட்டசபையில் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் வலியுறுத்தல்
/
பரங்கிப்பேட்டையை தலைமையாக கொண்டு புதிய தாலுகா சட்டசபையில் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் வலியுறுத்தல்
பரங்கிப்பேட்டையை தலைமையாக கொண்டு புதிய தாலுகா சட்டசபையில் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் வலியுறுத்தல்
பரங்கிப்பேட்டையை தலைமையாக கொண்டு புதிய தாலுகா சட்டசபையில் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் வலியுறுத்தல்
ADDED : ஏப் 13, 2025 05:21 AM

சிதம்பரம் : பரங்கிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டுமென, சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ., பாண்டியன் பேசினார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, அவர் பேசியதாவது:
கேத் லேப் வசதி
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு இருதய சிகிச்சை மேற்கொள்ள கேத் லேப் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இருதய சிகிச்சை நிபுனர், நரம்பியல் மருத்துவர் உள்ளிட்ட உயிர் காக்கும் பிரிவுகளில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மற்ற மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு வழங்குவது போன்று இலவச மருத்து மாத்திரைகள் வழங்க வேண்டும்.
குப்பை கிடங்கு
ஓமக்குளம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்னை உள்ளிட உடல் உபாதைகள் ஏற்படுகி்றது. பொதுமக்கள் குடியிருப்பு இல்லாத பகுதிக்கு, குப்பை கிடங்கை மாற்ற வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை
கீழ திருக்கழிப்பாலை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் திட்டம் கொண்டு வரப்பட்டு நில அளவை மற்றும் மண் பரிசோதனை பணிகள் நடந்தன. பின், அரசுக்கு அறிக்கை அனுப்பி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக தடுப்பணை கட்டாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதம்பரம் மாவட்டம்
கடலுார் மாவட்டம் 9 சட்டசபை தொகுதிகளை கொண்ட பெரிய மாவட்டம். தி.மு.க.,வின் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றனர். ஆனால் இதுவரை ஒரு புதிய மாவட்டத்தையும் உருவாக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் அன்றைய முதல்வர் பழனிசாமி, 6 புதிய மாவட்டங்களை உருவாக்கினார். எனவே சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும்.
வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய குடியிருப்புகள்
சிதம்பரம் நகரில் தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளக்கரை, நாகச்சேரி குளக்கரை, ஓமக்குளம் குளக்கரை போன்ற நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த 591 வீடுகள் கோர்ட் உத்தரவால் இடிக்கப்பட்டன. வீடு இழந்து தவிக்கும் மக்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும்.
துாண்டில் வளைவு
சிதம்பரம் சட்டசபை தொகுதியில் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில் சாமியார் பேட்டை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்க வேண்டும்.
வனத்துறை அனுமதி
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் சின்னுார், புதுப்பேட்டை, புதுக்குப்பம், இந்திரா நகர், சாமியார்பேட்டை, குமாரபேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு சென்று வர வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை வசதி ஏற்படுத்த வனத்துறை அனுமதி வழங்க வேண்டும்.
கொள்ளிட கரை சாலை சீரமைப்பு
கொள்ளிடம் ஆற்றின் இடது கரையோர கிராமங்களான கருப்பூர் முதல் கொடியம்பாளையம் வரை 30 கி.மீ. தார் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும்.
அரியகோஷ்டியில் உயர்மட்ட மேம்பாலம்
பரங்கிப்பேட்டை மற்றும் முட்லுார் சாலையில் உள்ள அரியகோஷ்டி இரும்புபாதை பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.
கரை பலப்படுத்துதல்
கிள்ளை- பரங்கிப்பேட்டை இடையே மடுவங்கரை மற்றும் நவாப்பேட்டை கிராம பகுதியில் ரயில்வே இரும்புபாதை வெள்ளாற்றின் கரை அரிப்பால் சேதமடைந்து உடையும் அபாயம் உள்ளது. எனவே கரையை பலப்படுத்த வேண்டும்.
பிச்சாவரத்தில் புதிய ரெகுலேட்டர்
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், வடக்கு பிச்சாவரம் கிராமத்தில் பழுதடைந்த ரெகுலேட்டரை மாற்ற வேண்டும்.
பரங்கிப்பேட்டை தாலுகா
சிதம்பரம் தொகுதியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மற்றும் பெரியப்பட்டு முதல் சி.முட்லுார் வரை உள்ள வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு புவனகிரி தாசில்தார் அலுவலகம் வர வேண்டிய சூழல் உள்ளது. எனவே பரங்கிப்பேடைட்யை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும்.
பணி நிரந்தரம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுதிப்பூதியத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பரங்கிப்பேட்டை புதிய பேருந்து நிலையம்
பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் தற்போது தனியார் இடத்தில் இயங்கும் பஸ் நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையமாக அமைக்க வேண்டும்.
அடுக்கு மாடி குடியிருப்பு
சிதம்பரம் காந்தி சிலை அருகில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பை அகற்றி புதியதாக கட்டித் தர வேண்டும்.
மீன் இறங்கு தளம்
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தாண்டவராயன் சோழம்பேட்டை கிராமத்தில் மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

