/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
/
குடிநீர் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஜன 01, 2026 06:15 AM

பெண்ணாடம்: குடிநீர் கோரி நரிக்குறவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பெண்ணாடம் பேரூராட்சி, நரிக்குறவர் குடியிருப்பில் (13வது வார்டு) நுாறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள மினிடேங்கை பயன்படுத்தி இப்பகுதி மக்கள் குடிநீர் பெற்று பயனடைந்தனர். போதிய பராமரிப்பின்றி மினிடேங்க் கடந்த 2 மாதங்களுக்கு முன் பழுதானது. தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணி துவங்கியது. ஆனால் பணிகள் முடியவில்லை. அருகிலுள்ள ஆதியன் குடியிருப்பில் மினிடேங்கில் நரிக்குறவர்கள் மக்கள் குடிநீர் பெற்று பயனடைந்தனர்.
நேற்று காலை ஆதியன் குடியிருப்பு வாசிகள் தண்ணீர் எடுக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:30 மணியளவில் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த, பேரூராட்சி செயல் அலுவலர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் மற்றும் போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர். அப்போது, விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவித்தனர். அதையேற்று, காலை 11:50 மணியளவில் அனைவரும் கலந்து சென்றனர்.
தொடர்ந்து, செயல் அலுவலர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் ஆகியோர் நரிக்குறவர் குடியிருப்பில் மினிடேங்க் பணிகளை ஆய்வு செய்து, விரைவில் பணிகள் முடிக்க ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தனர். அதுவரை ஆதியன் குடியிருப்பில் உள்ள மினிடேங்கில் குடிநீர் பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.

