ADDED : ஜூலை 13, 2026 03:52 AM

நடுவீரப்பட்டு: பலாப்பழம் மதிப்புக்கூட்டு மைய கட்டுமான பணிகள் விறு விறுப்படைந்துள்ளன.
பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பலா சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் பல டன் கணக்கில் பலாப்பழம் விளைச்சல் விளைந்து வருகிறது. பண்ருட்டி பலாப்பழத்திற்கு என்றுமே தனி மதிப்பு உண்டு.
இப்பகுதி செம்மண் பூமி என்பதால் இங்கு விளையும் பலாப்பழங்கள் தனிசுவை உடையவை.
இப்பகுதியில் விளையக்கூடிய பலாப்பழங்கள் சரியான முறையில் பதப்படுத்தாததாலும், மதிப்புக்கூட்டு செய்யாததாலும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பழங்கள் அழுகி சாலையில் வீசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பலாப்பழங்களை பதப்படுத்திட மதிப்பு கூட்டுமையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள், பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கடந்த தி.மு.க., ஆட்சியில், சி.என்.பாளையம், பட்டீஸ்வரத்தில் கடந்த, 2025 ம் ஆண்டு பிப்ரவரியில், 16 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பலாப்பழம் மதிப்புக்கூட்டு மைய கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
இந்த மையத்தில் 20 வகையான இயந்திரங்களை கொண்டு பலா சுளைகள் காய வைத்து பதப்படுத்திடல், பலா அல்வா, பலா தோலில் சத்து பவுடர் தயாரித்தல், பலாக்கொட்டையில் சத்துமாவு தயாரித்தல், பலா ஊறுகாய், பலா பவுடர் தயாரித்தல், ஐஸ்கிரீம், கூழ், சிப்ஸ் உள்ளிட்ட பல வகைகளில் பலாப்பழங்களை மதிப்பு கூட்டு செய்து, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பலாப்பழம் மதிப்பு கூட்டு மையத்தில் பழத்தை வீணாக்காமல், பல வகையான பொருட்களாக மாற்றி மதிப்பு கூட்டு செய்து விற்பனை செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கட்டட கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மையம் செயல்பட துவங்கினால், பண்ருட்டி பகுதியில் விளையும் பலா பழங்கள், வீணாகுவது முழுமையாக நிறுத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பலா மதிப்பு கூட்டு மையம் இயங்கிட துவங்கினால் இப்பகுதியை சேர்ந்த பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய நிலை உள்ளது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த பலா மதிப்புகூட்டு மையத்தினை உடனடியாக கட்டி முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
