/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடர் மழையால் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்புகிறது! நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடர் மழையால் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்புகிறது! நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்புகிறது! நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்புகிறது! நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 27, 2025 12:13 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சிறிய மற்றும் பெரிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏ ரிகளில் நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். அதில் நவம்பர் மாதத்தில் தான் கனமழை கொட்டும். இந்த ஆண்டு வழக்குத்திற்கு மாறாக அக்டோபர் மாதத்தில் அதிகளவு கனமழை கொட்டி வருகிறது.
பருவ மழையை கடந்து வங்கக்கடலில் ஏதாவது புயல், அல்லது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டால்தான் மழை பெய்யும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 3 வது வாரத்தில் வடகிழக்கு பருவ காற்று வீசத் துவங்கியது. அதைத்தொடர்ந்து வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. 21ம் தேதி இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக கடலுாரில் 179.8 மி.மீ., மழை பெய்தது.
மாவட்டத்தின் சராசரி மழையாக 94.67 மி.மீ., பதிவானது.
கடலுார் மாவட்டத்தில் 10 ஆண்டு சராசரி மழையளவு 1200 மி.மீட்டர் ஆகும். அதில் வடகிழக்கு காற்றின் மூலம் நமக்கு 697.5 மி,மீ., மழை பெய்ய வேண்டும்.
அக்டோபர் மாதம் மட்டும் 220 மி.மீ., மழை பொழிவதற்கு 275.36 மி.மீ., மழை பெய்துள்ளது. மொத்தத்தில் 55.36 மி.மீ., கூடுதல் மழை பெய்துள்ளது.
அதேபோல், தென்மேற்கு பருவ காற்றின் மூலம் நமக்கு செப்டம்பர் மாதம் கிடைக்க வேண்டிய சராசரி மழையான 131 மி.மீட்டருக்கு 148 மி.மீ., மழையும், ஆகஸ்ட் மாதம் பெய்ய வேண்டிய சராசரி மழையான 129 மி.மீட்டருக்கு 159 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் வழக்கமாக பெய்யக்கூடிய மழையளவில் கூடுதல் மழையே தொடர்ந்து பெய்து வந்துள்ளது.
இதனால் பெண்ணையாற்றின் பெரிய நீர்த்தேக்கமான சாத்தனுார் அணை நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்திலுள்ள பெரிய ஏரியான வீராணம் ஏரியில், தண்ணீர் முழு கொள்ளளான 1465 மி.கனஅடிக்கு 945 கன அடி இருப்பு உள்ளது.
வரும்காலத்தில் கனமழையை எதி்ர்பார்த்து அணையின் பாதுகாப்பு கருதி குறைவான இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வடவாறு வழியாக 276 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு தண்ணீர் பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்டு வருகிறது. இது தவிர சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
பெருமாள் ஏரி 724 கன அடிக்கு 500கன அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. சிதம்பரம் பகுதியில் 50 சதவீதம் வரை நிரம்பிய ஏரிகள் 10ம், விருத்தாசலம் பகுதியில் 25 ஏரிகளும் உள்ளன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இருப்பினும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீர் இருப்பு வைக்காமல் தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 8.30மணி முதல் நேற்று காலை 8.30மணி வரை பெய்த மழையளவு வருமாறு: குறிஞ்சிப்பாடி 36 மி.மீ., சேத்தியாதோப்பு 18, லால்பேட்டை 14.8, கொத்தவாச்சேரி 14, காட்டுமன்னார்கோவில் 9, கடலுார் 6.2, கலெக்டர் அலுவலகம் 5.5, குப்பனத்தம் 4.2, விருத்தாசலம் 4, வேப்பூர் 3, புவனகிரி 1 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 36மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள சிறிய ஏரிகளுக்கு வரத்து வாய்க்கால் சரிவர துார் வாரத காரணத்தால் தாமதமாக நிரம்பி வருகின்றன.
விரைவில் அனைத்து ஏரிகளும் முழு கொள்ளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

