மர்மமாக இறக்கும் காகங்கள்: விருத்தாசலத்தில் மக்கள் பீதி
மர்மமாக இறக்கும் காகங்கள்: விருத்தாசலத்தில் மக்கள் பீதி
UPDATED : நவ 18, 2026 10:59 PM
ADDED : நவ 18, 2026 07:09 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் காகங்கள் தொடந்து மர்மமான முறையில் இறந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பெரிய ஆலமரம் உள்ளது. இந்த மரம், காகம் உள்ளிட்ட பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாக உள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மரத்தில் இருந்த காகம் ஒன்று இறந்து கிடந்தது. அதேபோல், நேற்று (நவ.,17) மூன்று காகங்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இறந்து கிடந்தது.
இதையறிந்த விருத்தாசலம் கால்நடை மருத்துவர் கோமகன், இறந்து கிடந்த காகங்களின் உமிழ்நீர் மற்றும் எச்சம் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.
அதேபோல், கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று 5 காகங்கள் இறந்து கிடந்தன. இந்நிலையில், இன்றும் (நவ.,18) 3 காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதேபோல், நகரின் பல்வேறு இடங்களில் காகங்கள் பறந்து கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்து இறக்கின்றன.
விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து காகங்கள் இறந்து வருவதால் பறவை காய்ச்சலால் காகங்கள் இறந்து வருகிறதா அல்லது வேறு ஏதேனும் மர்ம நோயால் பாதிப்பட்டு இறக்கிறதா என தெரியாமல் மக்கள் குழம்பி உள்ளனர். மேலும், இதனால், மற்ற பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமான என மக்கள் பீதியடைந்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்தி மக்களின் பீதியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
