ADDED : நவ 15, 2026 10:01 PM
விருத்தாசலம்: சின்னகண்டியங்குப்பம் கிராமத்தில் காய்ச்சலில் சிறுமி பலியானதை தொடர்ந்து, அப்பகுதியில் மருத்துவ குழுவினர் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் இன்று (நவ.,15) ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயது சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர், நேற்று (நவ.,14) சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையறிந்த மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாரிச்செல்வி தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று கிராமத்தில் முகாமிட்டு, பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இதில், 3 பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. உடன், அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் அப்பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பதால், புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால், மாவட்ட மலேரியா அலுவலர் கணபதி தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் மேலும் மூவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
