/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைப்பட்டாவை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளிகள்
/
மனைப்பட்டாவை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளிகள்
ADDED : ஜன 28, 2025 05:50 AM

கடலுார் : அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை மாற்றுத்திறனாளிகள் ஒப்படைக்க வந்ததால், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் தாலுகா பகுதியை சேர்ந்த 45க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது, எம்.புதுார் அருகே உள்ள மாவடிப்பாளையத்தில் தங்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த இடத்தை அளவீடு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு இடத்தை ஒதுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வீட்டுமனையை அளந்து ஒப்படைக்காததால் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவை, அங்கிருந்த நில எடுப்பு டி.ஆர்.ஓ., சிவ ருத்ரய்யாவிடம், ஒப்படைக்க முயன்றனர். அப்போது அவர், 2 வாரத்திற்குள் இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.