/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டம் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
/
பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டம் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டம் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டம் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
ADDED : டிச 12, 2025 06:41 AM

திட்டக்குடி: கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில், வெலிங்டன் நீர்தேக்கத்தில் தற்போது, 19 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம், வெலிங்டன் நீர்தேக்க உதவிபொறியாளர் அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் நடந்தது. விருத்தாசலம் செயற்பொறியாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் பிரசன்னா முன்னிலை வகித்தார்.
உதவி பொறியாளர் வெங்கடேசன் வரவேற்றார். உதவி பொறியாளர்கள் சுதர்சன், செந்தில்நாதன், வேளாண் துறை அதிகாரிகள், பாசன சங்க விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
அதில், 'வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்களை முறையாக துார் வாரவில்லை. இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து கடைமடைக்கு தண்ணீர் செல்லாது. அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் பாதிப்பு இல்லாமல் தண்ணீர் பகிர்ந்து வழங்க வேண்டும். வாய்க்கால் துார்வாராமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்' என குற்றம் சாட்டி, அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.
கூட்ட முடிவில், 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கீழ் மட்ட பாசன வாய்க்கால் மூலம், 7 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசனம் வசதிபெறும்.
எதிர் வரும் நாட்களில் மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில் மேல்மட்ட கால்வாயை ஆய்வு செய்து நீர்வரத்திற்கேற்ப கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். நீர்த்தேக்கத்தின் தண்ணீரை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீரை மீன் பிடிப்பதற்காகவோ அல்லது வேறு பயன்பாட்டிற்காகவோ தேக்கி வைக்கக்கூடாது. பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் கீழ்மட்ட வாய்க்கால்கள் மற்றும் மேல்மட்ட வாய்க்கால்கள் பொக்லைன் மூலம் புனரமைத்து தண்ணீர் செல்ல ஏதுவாக சீரமைக்கப்படும் என செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

