/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மார்க்கெட்டில் 'சீல்' வைக்க முடிவு பண்ருட்டி வியாபாரிகள் எதிர்ப்பு
/
மார்க்கெட்டில் 'சீல்' வைக்க முடிவு பண்ருட்டி வியாபாரிகள் எதிர்ப்பு
மார்க்கெட்டில் 'சீல்' வைக்க முடிவு பண்ருட்டி வியாபாரிகள் எதிர்ப்பு
மார்க்கெட்டில் 'சீல்' வைக்க முடிவு பண்ருட்டி வியாபாரிகள் எதிர்ப்பு
ADDED : ஆக 11, 2025 07:07 AM
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சியில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டும் பணிக்காக கடைகளை காலி செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு காய்கறி மற்றும் மளிகை கடைகள் 120 உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு வாடகைதாரர்கள் தங்களது சொந்த செலவில் கடைகளை புதுப்பித்துக் கொள்ள நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது.
அதன்பேரில், வியாபாரிகள் தங்கள் கடைகளை கான்கீரீட் கட்டடங்களாக மாற்றினர். இங்கு, 40 கடைகள் பழுதடைந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை இடித்து அகற்றி விட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நகர்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.82 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் புதிய மார்க்கெட் கட்ட முடிவு செய்தது.
இதன் காரணமாக கடைகளை காலி செய்ய வியாபாரிகளுக்கு 6 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று (11ம் தேதி) முதல் கடைகளை காலி செய்து, நாளை (12ம் தேதி) மார்க்கெட்டில் சீல் வைக்க பாதுகாப்பு கேட்டு நகராட்சி சார்பில் டி.எஸ்.பி., ராஜாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவா கூறுகையில், 'வியாபாரிகள் கடைகள் காலி செய்ய 3 மாதம் அவகாசம் கேட்டோம். ஆனால், அதிகாரிகள் தரப்பில் நாளை (இன்று) முதல் கடைகள் அகற்றுவதாக தெரிவித்துள்ளனர். மாற்று இடம் வழங்க வேண்டும். கால அவகாசம் வழங்க வேண்டும்' என்றார்.
சங்க செயலாளர் மோகன் கூறுகையில், 'நகராட்சி சார்பில் வாடகைதாரர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் இடத்தை காலி செய்ய கூறுவது ஏற்புடையதல்ல. 3,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க' வேண்டும்.