/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வயல்களில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் கவலை
/
வயல்களில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் கவலை
ADDED : நவ 25, 2025 05:12 AM

வேப்பூர்: தொடர் மழையால் மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றிய பகுதிகளில் பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டதின் கடைக்கோடியில் உள்ள மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றியத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இதில், பெரியநெசலுார், விளாம்பாவூர், அடரி, மாங்குளம், சிறுபாக்கம், மங்களூர் உள்ளிட்ட 70 கிராமங்களில் ஆண்டுதோறும் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், கேழ்வரகு, பருத்தி, மணிலா, கிணற்று நீர் பாசனம் மூலம் மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நடப்பாண்டில், மக்காச்சோளம், கேழ்வரகு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவற்றை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மழைநீர் வயல்களில் தேங்கி நிற்பதால், சாகுபடி செய்த பயிர்கள் அழுகும் நிலை உள்ளது.
உழவு, உரம், கூலி ஆட்கள் செலவு செய்து, அதிக மகசூல் கிடைக்கும் என, எதிர்பார்த்த நிலையில், மழைநீர் தேங்கி நிற்பதால் மகசூல் பாதிக்கப்படும் என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

