/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்குமா காவல் துறை?
/
மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்குமா காவல் துறை?
மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்குமா காவல் துறை?
மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்குமா காவல் துறை?
ADDED : செப் 27, 2024 05:31 AM
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அதற்கு அடுத்ததாக வந்த தானே புயல், கொரானா தொற்று போன்றவற்றின் காரணமாக கடலோர மாவட்ட மக்களின் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டது.
மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் அன்றாட வாழ்க்கைக்கு பல புதியவியாபாரங்களை செய்வதில் ஆர்வம் காட்டினர். இதில், குலத்தொழிலாக செய்துவந்த விவசாயத்தையே விட்டுவிட்டு கூடுதல் லாபம் தரும் தொழிலுக்கு மாறி விடுகின்றனர்.
எந்த வியாபாரம் துவங்கினாலும் அது சில காலம் தான் நிலைத்து நிற்கிறது. போட்டி ஏற்படுவதால் கடைசியில் லாபம் குறைந்து பிசினசை மூடும் நிலை ஏற்படுகிறது. இதனால் கடனாளியாக தவிக்கும் நிலை தான் உள்ளது.
இதனை பயன்படுத்தியும், மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்பதாலும் மக்களுக்கு தனியார் மைக்ரோ பைனாஸ் கம்பெனிகள், சுய உதவிக்குழுக்கள் என ஏராளமானோர் வட்டிக்கு பணம் தர தயாராக உள்ளனர்.
இதனால் வட்டி மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை நடுத்தர குடும்பத்தினர் கற்றுக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக தாங்கள் பாரம்பரியமாக செய்து வந்த வியாபாரத்தை மாற்றிக் கொண்டு வட்டிக்கு விட துவங்கியுள்ளனர். மற்றவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றால் அரசிடம் அனுமதி பெற்ற பின்பே வட்டிக்கடை, பைனான்ஸ் தொழிலை செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது.
ஆனால், தற்போது சேமிப்பு பழக்கம் உள்ள பலர் வட்டி தொழிலில் கொடி கட்டி பறக்கின்றனர். இதில் கந்து வட்டி, மீட்டர் வட்டியை போட்டு படாத பாடுபடுத்துகின்றனர்.
விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர், டிரைவர்கள், போலீசார், என எல்லோருமே இந்த தொழிலில் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர்.
மொபைல் போனில் இருந்து பணத்தை தின வட்டிக்கு கொடுக்கின்றனர். ஓரிரு நாட்களில் பணத்தை திரும்ப மொபைல் போனிலேயே அனுப்பிட வேண்டும்.
லட்சக்கணக்கில் வட்டிக்கு வாங்குபவர்கள் தமது சொத்துகளை முழுதுமாக, கந்துவட்டிக்காரர்களிடம் கிரயம் செய்து கொடுத்துவிட வேண்டும்.
அவ்வாறு கிரயம் செய்து கொடுத்தவுடன் சொத்து கொடுத்தவர்கள் செலவிலேயே பட்டாவும் மாற்றி தர வேண்டும். இதன் பின் பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்திய பின்னர்தான் மீண்டும் கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து ஏற்கனவே கிரயம் செய்த சொத்தை திரும்ப கிரயம் பெற வேண்டும்.
இதில் பலர் தமது சொத்துக்களை இழந்து வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் பல மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகள் கடன்களை தாரளமாக வீடு தேடி வந்து கொடுக்கின்றனர். ஆனால் அதன் பின்னர் இ.எம்.ஐ., செலுத்தவில்லையென்றால் உள்ளூர் குண்டர்களை் ஏவி விட்டு வீட்டிற்கு வந்து கலாட்டா செய்வது, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துகொண்டு வெளியேறாமல் இருப்பது, கடன் வாங்கியவரிடம் வாய்க்கு வந்தபடி பேசி வம்புக்கு இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே இதுபோன்று கடன் பிரச்னை குறித்து வரும் புகார்கள் மீது எஸ்.பி., பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால்தான் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் பிழைப்பார்கள்.

