/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார்த்திகை தீப அகல் விளக்குகள் விற்பனை இலக்கு... ரூ.25 கோடி' தமிழகம் முழுவதும் அனுப்ப ஏற்பாடுகள் தீவிரம்
/
கார்த்திகை தீப அகல் விளக்குகள் விற்பனை இலக்கு... ரூ.25 கோடி' தமிழகம் முழுவதும் அனுப்ப ஏற்பாடுகள் தீவிரம்
கார்த்திகை தீப அகல் விளக்குகள் விற்பனை இலக்கு... ரூ.25 கோடி' தமிழகம் முழுவதும் அனுப்ப ஏற்பாடுகள் தீவிரம்
கார்த்திகை தீப அகல் விளக்குகள் விற்பனை இலக்கு... ரூ.25 கோடி' தமிழகம் முழுவதும் அனுப்ப ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : நவ 10, 2025 03:55 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் கார்த்திகை தீபத்திற்கு 25 கோடி ரூபாய்க்கு அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்க ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.
விருத்தாசலம், ஜங்ஷன் சாலையில், முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில், செராமிக் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது.
இங்கு, 200க்கும் மேற்பட்ட செராமிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 டன் வரை அகல் விளக்குகள் உ ற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும், பலவித பொம்மைகள், சுவாமி சிலைகள், டீ கப், வாட்டர் பில்டர், எலக்ரிக் ஹீட்டர், பறவைகள், இயற்கை காட்சி பொருட்கள், சானிட்டரி பொருட்களும் உற்பத்தியாகின்றன.
குறிப்பாக, வடமாநில தொழிலாளர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தொழிற்பேட்டை வளாகத்திலும் வெளியிலும் தங்கி, இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையின்போது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், கனடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும், அகல் விளக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
கார்த்திகை தீபம் இந்நிலையில், வரும் டிச., 4ம் தேதி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அகல் விளக்குகள் உற்பத்தி செய்யும் பணியில் இரவு பகலாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீப விழாவிற்கு, தமிழகத்தில் மட்டுமே அகல் விளக்குகள் விற்பனையாகும். அதுபோல அனைத்து மாவட்டங்களுக்கும் ரயில்கள் மற்றும் சாலை மார்க்கமாக அகல் விளக்குகள் ஏற்றுமதி செய்யப்படும்.
உற்பத்தி பாதிப்பு ஆனால், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அகல் விளக்குகள் உற்பத்தி பெருமளவு பாதித்தது. சாதாரண மற்றும் டிசைன் விளக்குகளை உற்பத்தி செய்து, அவற்றை உலர வைக்க முடியாமல் தொழிலாளர்கள் பாதித்தனர்.
ஒரு சிலர் ஈரப்பதமான அகல் விளக்குகளை பெரிய ஹாலில் பரவலாக கொட்டி, ராட்சத பேன்களில் உலர வைத்தனர். இந்நிலையில், கார்த்திகை தீபத்திற்கு ஒரு மாத காலத்திற்கு குறைவாக இருப்பதால், அகல் விளக்குகள் உற்பத்தி பணி தீவிரமடைந்துள்ளது.
ரூ.25 கோடிக்கு இலக்கு நடப்பாண்டு கார்த்திகை தீப திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஆர்டர்களின் பேரில், 25 கோடி ரூபாய் விலை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள தொழிற்கூடங்கள் அனைத்திலும் தினசரி 40 முதல் 60 டன் அகல் விளக்குகள் உற்பத்தி செய்து, அவற்றை தரம் பிரித்து, சாக்கு மூட்டைகளில் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.
விலை சரிவு இது குறித்து செராமிக் உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், 'கடந்தாண்டுகளில் தலா ஒரு அகல் விளக்கு விலை 75 பைசாவில் இருந்து, 50 பைசாவாக சரிந்துவிட்டது.
மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, ஊழியர்கள் தட்டுப்பாடு, ஊதியம் அதிகரிப்பு என உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை. தமிழக அரசு ம் தீர்வு காண முன்வரவில்லை.
இதனால் செராமிக் தொழில் பெரும் சவாலாக இருக்கிறது' என்றார்.

