ADDED : செப் 19, 2026 02:13 AM

பண்ருட்டி: முதல்வர் மருந்தகத்தில் புகுந்து, காதலி திவ்யா, 23, என்பவரை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன் சந்தோஷ், 30, கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, கீழ்மாம்பட்டை சேர்ந்த திவ்யா, நர்சிங் படித்தவர். இரண்டு ஆண்டுகளாக, பண்ருட்டியில், முதல்வர் மருந்தகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது வீட்டின் அருகில் வசிக்கும் உறவினரான சந்தோஷ் என்பவரை, திவ்யா ஆறு ஆண்டுகளாக காதலித்துள்ளார். நேற்று கலை, 11:00 மணிக்கு மருந்தகத்தில் திவ்யா இருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ், மருந்தக கதவுகளை மூடிவிட்டு, தான் கொண்டு வந்த காய்கறி வெட்டும் கத்தியால், திவ்யாவின் கழுத்து, முதுகு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக குத்தி, கிழித்தார்.
திவ்யாவின் அலறல் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து, ரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் நின்றிருந்த சந்தோஷை பிடித்து, பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். உயிருக்கு போராடிய திவ்யாவை, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பி.இ., பட்டதாரியான சந்தோஷ், சென்னையில் ஏ.சி., மெக்கானிக் வேலை செய்து வருகிறார். திவ்யா சில மாதங்களாக வேறு ஒருவருடன் பேசி வந்ததை அறிந்த சந்தோஷ், ஆத்திரமடைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, சந்தோஷை கைது செய்தனர்.
