/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் சொத்துக்கள் மீட்பு நடவடிக்கை 'கிடப்பில்' ஆர்வமில்லா அதிகாரிகள்: புலம்பும் பக்தர்கள்
/
கோவில் சொத்துக்கள் மீட்பு நடவடிக்கை 'கிடப்பில்' ஆர்வமில்லா அதிகாரிகள்: புலம்பும் பக்தர்கள்
கோவில் சொத்துக்கள் மீட்பு நடவடிக்கை 'கிடப்பில்' ஆர்வமில்லா அதிகாரிகள்: புலம்பும் பக்தர்கள்
கோவில் சொத்துக்கள் மீட்பு நடவடிக்கை 'கிடப்பில்' ஆர்வமில்லா அதிகாரிகள்: புலம்பும் பக்தர்கள்
ADDED : பிப் 14, 2024 03:24 AM
விருதை மாநகரில், பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டு தோறும் விமர்சையாக நடக்கிறது. தினமும் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் வருகின்றனர்.
வரலாற்று சிறப்புகளை உடைய பழமையான இக்கோவிலுக்கு, விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. கட்டடங்கள் வாடகை, நில குத்தகை மற்றும் உண்டியல் வருமானம் மூலம் கோவில் நிர்வாகம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும், பக்தர்களுக்கு இடையூறு இன்றி, கோவில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய, அறநிலையத்துறை கடலுார் உதவி ஆணையர் பரணிதரன் தலைமையிலான அதிகாரிகள், கோவில் சொத்துக்களை மீட்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, தேரடி ஆக்கிரமிப்புகள், கிழக்கு கோபுர வாசலில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன.
மேலும், எருமனுார் சாலையில் 30 கோடி மதிப்பிலான நிலம், குமாரதேவர் மடம் அருகே 10 கோடி மதிப்பிலான நிலம், உளுந்துார்பேட்டை சாலையில் அச்சகம் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மற்றும் பெரிய கண்டியங்குப்பம், கோ.பொன்னேரி என, பல இடங்களில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டன.
அறநிலையத்துறை நடவடிக்கை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், உதவி ஆணையர் பரணிதரன் பதவி உயர்வில் சென்றதை தொடர்ந்து, கோவில் சொத்துக்கள் மீட்பு நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
பொதுமக்கள் நீண்ட கோரிக்கை ஏற்று, கடந்தாண்டு, தேரடியின் மறுமுனையில் இருந்த 10 ஆக்கிரமிப்பு கடைகள் மட்டுமே அகற்றப்பட்டன. ஆனால், கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அப்படியேத்தான் உள்ளது. இதனால் தேரோடும் வீதியில் வாகன நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது.
கோவில் சொத்துக்களை மீட்க புதிய அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என, பக்தர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் கலெக்டர் தலையிட வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

