/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டா ரத்தான பயனாளிகள் எருமனுாரில் சாலை மறியல்
/
பட்டா ரத்தான பயனாளிகள் எருமனுாரில் சாலை மறியல்
ADDED : ஜூலை 03, 2025 11:22 PM

விருத்தாசலம்: இலவச மனைப்பட்டா ரத்து செய்யப்பட்ட பயனாளிகள், எருமனுார் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் கிராமத்தில் 1999ம் ஆண்டில், 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாகியும் பயனாளிகள் பலர் பட்டாவை புதுப்பிக்காததால், வருவாய்த்துறை மூலம் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன.
இது தொடர்பாக கலெக்டர், ஆர்.டி.ஓ., என பலரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், பட்டாக்கள் ரத்தான பயனாளிகள் 50க்கும் மேற்பட்டோர், விருத்தாசலம் - எருமனுார் சாலையில் நேற்று மதியம் 1:30 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, ரத்து செய்யப்பட்ட பட்டாக்களை புதுப்பித்து மீண்டும் வழங்க வேண்டும். முறைகேடாக பட்டா பெற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பட்டா குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட வேண்டும். சாலை மறியலில் ஈடுபட்டால் தீர்வு கிடைக்காது என எச்சரித்தனர்.
இதையேற்று, அனைவரும் ஆர்.டி.ஓ.,வை சந்திக்கப் போவதாக கூறி கலைந்து சென்றனர். இதனால், எருமனுார் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.