/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதம்
/
நகராட்சி ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதம்
ADDED : செப் 05, 2025 11:55 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் சாலையை உடைத்து போடப்பட்ட பைப்புகளை அகற்ற முயன்ற நகராட்சி ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
நெல்லிக்குப்பம் நகர பகுதியில் இருந்து வான்பாக்கம் வரை செல்லும் 2 கிமீ., துாரம் சாலையை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் சாலை பணி துவங்குவதற்குள் கழிவுநீர் பைப் அமைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலேயே நகரப் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் சாலையை உடைத்து கழிவுநீர் செல்ல பைப் புதைத்தனர். தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் சாலையை சேதபடுத்தி போடப்பட்ட பைப்களை அகற்ற நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், தி.மு.க., கவுன்சிலர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி விடுவார்கள். பைப்களை அகற்ற வேண்டாமென கேட்டுக் கொண்டனர். அதையேற்று ஊழியர்கள் கலைந்து சென்றனர்.