தரமின்றி கட்டுமான பணிகள் கடலுாரில் மக்கள் போராட்டம்
தரமின்றி கட்டுமான பணிகள் கடலுாரில் மக்கள் போராட்டம்
UPDATED : அக் 27, 2026 06:29 PM
ADDED : அக் 27, 2026 06:26 PM

கடலுார்: கடலுார் கோவில் குளத்தில் கட்டுமான பணிகள் தரமில்லாமல் நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. கடலுார், கே.என்.பேட்டையில், திரவுபதியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தை சுற்றிலும் ரூ. 49 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கரையை பலப்படுத்தி, நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் தரமில்லாமல் இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:00 மணிக்கு கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, வி.ஏ.ஓ., சுரேஷ் ஆகியோரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். இதனையேற்று பொதுமக்கள் 10:30 மணிக்கு கலைந்து சென்றனர். கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
