/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பணிச்சுமையை குறைக்க பி.டி.ஓ.,க்கள் முறையீடு
/
பணிச்சுமையை குறைக்க பி.டி.ஓ.,க்கள் முறையீடு
ADDED : மே 24, 2025 07:12 AM
கடலுார், : வீடு கட்டும் திட்டங்களால் கூடுதலாகி வரும் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேற்று, கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்.
கலைஞர் வீடு கட்டும் திட்டம், கலைஞர் வீடு மறு கட்டமைப்பு திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட பல வீடு கட்டும் திட்டங்கள் உள்ளன.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வாரம் முழுதும் ஆய்வு உள்ளிட்ட பணிகளால் கூடுதல் சுமை ஏற்படுகிறது.
அரசு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்படுகிறது. அதனால் எங்களால் வேறு பணிகளை பார்க்க முடியவில்லை என கூறி நேற்று மாலை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து தங்கள் குறைகளை எடுத்துக்கூறினர்.
இதை கேட்ட கலெக்டர் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நடத்துவதை தவிர்த்துவிடலாம் எனவும், மற்ற பணிகள் குறித்து வரும் காலத்தில் சரி செய்யப்படும் எனவும் கூறினார்.