/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கோவிலில் திருப்பணி... தீவிரம்; பக்தர்களுக்கு கூடுதல் வசதிக்கு ஏற்பாடு
/
கொளஞ்சியப்பர் கோவிலில் திருப்பணி... தீவிரம்; பக்தர்களுக்கு கூடுதல் வசதிக்கு ஏற்பாடு
கொளஞ்சியப்பர் கோவிலில் திருப்பணி... தீவிரம்; பக்தர்களுக்கு கூடுதல் வசதிக்கு ஏற்பாடு
கொளஞ்சியப்பர் கோவிலில் திருப்பணி... தீவிரம்; பக்தர்களுக்கு கூடுதல் வசதிக்கு ஏற்பாடு
ADDED : ஏப் 14, 2025 04:28 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், குளியலறை, கழிவறை, திருமண மண்டபம் சீரமைக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பிராது கட்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பெப்சி சி.இ.ஓ., வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு தங்க கிரீடம் காணிக்கை வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெ., பெங்களூரு சிறையில் இருந்தபோது, மாஜி அமைச்சர் கோகுலஇந்திரா ஜாமின் வேண்டி பிராது கட்டியதும் 3வது நாளில் ஜாமின் கிடைத்தது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டி, அவரது மனைவி துர்கா, பிராது கட்டி, முதல்வரானதும், நேர்த்திக்கடன் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபோல் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பொது மக்கள் பலரும் பிராது கட்டி வருகின்றனர்.
இக்கோவிலுக்கு கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உட்பட பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை செய்து தரவில்லை. குளியலறை, கழிவறை, முடி காணிக்கை செலுத்துமிடம், திருமண மண்டபம் என பல்வேறு குறைபாடுகள் காரணமாக பலமடங்கு கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.
இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், பழுதடைந்த திருமண மண்டபத்தை சீரமைத்திட, அறநிலையத்துறை சார்பில் 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதுபோல், பழுதான கழிவறை, குளியலறையை நடிகை நளினி ராமராஜன் சகோதரர் கார்த்திகேயன், 26 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தொல்லியல் குழு ஆய்வு
கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் அருள்பாலிக்கும் பிரகாரத்திற்கு பின்பகுதியில் இரண்டாவது பிரகாரம் கட்ட அறநிலையத்துறை அனுமதி அளித்த நிலையில், மூன்றாவது பிரகாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தொல்லியல்துறை வல்லுனர் இளஞ்செழியன் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, கும்பாபிேஷக திருப்பணி குறித்து அமைச்சர் கணேசன் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அமைச்சர் உட்பட பக்தர்கள் பலரும் திருப்பணிக்கு நிதியுதவியை வாரி வழங்கியுள்ளனர். மேலும், கோவில் வளாகத்தில் உள்ள கும்பாபிேஷக திருப்பணிக்கான நிதி வழங்கும் மையத்தில், பக்தர்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
திருப்பணி தீவிரம்
கொளஞ்சியப்பர் கோவிலை சுற்றியும் சேதமடைந்த சுற்றுச்சுவரை முற்றிலுமாக அகற்றிவிட்டு, புதிதாக சுற்றுச்சுவர் கட்டும் பணி முடிந்தது. மேலும், சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் மூலவர் சன்னதியின் விமானம், அதைச் சுற்றிய பகுதியை பழமை மாறாமல் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. மேலும், கிழக்கு, வடக்கு கோபுரங்கள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பிரசித்தி பெற்ற கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடப்பதுடன், வெளியூர் பக்தர்கள் நலன் கருதி குளிலயறை, கழிவறை, திருமண மண்டபம் போன்ற அடிப்படை வசதிகளும் தன்னிறைவு பெறும் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.