UPDATED : அக் 02, 2026 01:25 AM
ADDED : அக் 02, 2026 01:22 AM

விருத்தாசலம்: காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை காரணமாக தென்மாவட்ட ரயில்களில் முண்டியடித்தபடி பயணிகள் சென்றனர்.
காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை, நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை நாட்கள் என்பதால், தலைநகரான சென்னையில் தங்கியிருந்த தென் மாவட்ட பயணிகள் சொந்த ஊர்களுக்கு நேற்று மாலை புறப்பட துவங்கினர். சாலை மார்க்கத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள், ஆங்காங்கே டோல்கேட்டுகளில் நெரிசலில் சிக்கின.
அதுபோல், சென்னையில் இருந்து விழுப்புரம் – விருத்தாசலம் – அரியலுார் – திருச்சி மார்க்கமாக சென்ற தென் மாவட்ட ரயில்களில் முண்டியடித்து கொண்டு பயணிகள் சென்றனர். வழக்கத்திற்கு அதிகமாக பயணிகள் சென்றதால், நிற்க கூட முடியாமல் திணறும் அவலம் ஏற்பட்டது. பொதுப்பயண பெட்டிகள் மட்டுமல்லாது ரிசர்வேஷன் பெட்டிகளிலும் நின்றபடி பயணித்தனர்.
அதன்படி, விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு, நே ற்று மாலை 6:50 மணிக்கு வந்த சென்னை - காரைக்குடி பல்லவன் சூப்பர் பாஸ்ட் ரயிலில் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இறங்கி, ஏறினர். அதன்பின் வந்த கொல்லம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பொதிகை, முத்துநகர், ராக்போர்ட் என அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பெண்கள், மாணவிகள் உள்ளிட்ட பலரும், படிக்கட்டுகளிலும் ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்றனர்.
