/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாய தொழிற்சாலையில் டேங்க் வெடித்து விபத்து கடலுாரில் 30 பேர் மயக்கம்; 20 வீடுகள் சேதம்
/
சாய தொழிற்சாலையில் டேங்க் வெடித்து விபத்து கடலுாரில் 30 பேர் மயக்கம்; 20 வீடுகள் சேதம்
சாய தொழிற்சாலையில் டேங்க் வெடித்து விபத்து கடலுாரில் 30 பேர் மயக்கம்; 20 வீடுகள் சேதம்
சாய தொழிற்சாலையில் டேங்க் வெடித்து விபத்து கடலுாரில் 30 பேர் மயக்கம்; 20 வீடுகள் சேதம்
ADDED : மே 16, 2025 02:44 AM

கடலுார்: கடலுார் அருகே சிப்காட்டில், சாய தொழிற்சாலையில் அதிகாலையில் டேங்க் வெடித்து கழிவுநீர் வெளியேறியதில், 20 வீடுகள் சேதமடைந்தன, 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடலுார் சிப்காட் தொழிற்பேட்டையில் 'லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ்' என்ற சாய தொழிற்சாலை உள்ளது. 280க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இங்கு, ரசாயனம் கலந்த கழிவுநீர், 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பினாலான டேங்கில் சேகரித்து வைக்கப்பட்டது. இந்த டேங்க், நேற்று அதிகாலை வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறியது.
அதில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுநீர், அருகில் உள்ள குடிகாடு கிராம சாலைகளில் வழிந்தோடி வீடுகளுக்குள் புகுந்ததில் வீடுகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. 20க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதம் ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், சுனாமி வந்துவிட்டதாக அலறி அடித்து ஓடினர். வீடுகளில் பாய்ந்த கழிவுநீரால் 30க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், வாந்தி மயக்கம், குமட்டல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சாயம் கலந்த ரசாயனம் தண்ணீரால் அப்பகுதி முழுதும் கருப்பு நிறத்தில் காட்சியளித்தது.
சாலை மறியல்
தொழிற்சாலை நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும், பாதுகாப்பான முறையில் தொழிற்சாலையை இயக்க வேண்டும், கவனக்குறைவாக பணியாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாலை 4:30 மணிக்கு சிதம்பரம் -கடலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தாசில்தார் மகேஷ் மற்றும் முதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தததை ஏற்று மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து, வீடுகளில் புகுந்த கழிவுநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். வேகமாக வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் பல பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. அதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
சம்பவ இடத்தை எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவ முகாம்
கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், குமட்டல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடலுார் அரசு மருத்துவர்கள் தீபன், அமிர்தா தேவி அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
வழக்கு பதிவு
குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செந்தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார், லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் கம்பெனியின் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.