/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்! வீல் சேர், சாய்வு பாதை உள்ளிட்டவை ஏற்பாடு
/
ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்! வீல் சேர், சாய்வு பாதை உள்ளிட்டவை ஏற்பாடு
ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்! வீல் சேர், சாய்வு பாதை உள்ளிட்டவை ஏற்பாடு
ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்! வீல் சேர், சாய்வு பாதை உள்ளிட்டவை ஏற்பாடு
UPDATED : மார் 22, 2024 12:45 PM
ADDED : மார் 22, 2024 12:45 AM

கடலுார் : லோக்சபா தேர்தலையொட்டி, கடலுார் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மையங்களில்மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வசதிக்காக வீல் சேர், சாய்வு பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்., 19ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.
மாவட்டத்தில் கடலுார் மற்றும் சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகள் உள்ளன. இதில், சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம் புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மட்டுமே கடலுார் மாவட்டத்தில் வருகிறது. எஞ்சியுள்ள அரியலுார், ஜெயங்கொண்டம் அரியலுார் மாவட்டத்திலும், குன்னம் தொகுதி பேரம்பலுார் மாவட்டத்திலும் வருகிறது.
கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 51 ஆயிரத்து 141பேர், பெண்கள் 10 லட்சத்து 84 ஆயிரத்து 621, மூன்றாம் பாலினத்தவர்கள் 286 என மொத்தம் 21 லட்சத்து 3 ஆயிரத்து 48 பேர் உள்ளனர்.
இதில், முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 41,673, மாற்றுத் திறனாளிகள் 20,902 ஆகும். 55,500 பேர் தபால் ஓட்டு போட உள்ளனர்.
மாவட்டத்தில் 4945 பேலட் யூனிட், 2911 கன்ட்ரோல் யூனிட், 3406 வி.வி.பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
தேர்தலையொட்டி மாவட்டத்தில், 2,302 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் 11 மிகவும் பதற்றமானவை, 187 பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு, கூடுதல் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் மாநில எல்லைகளில் 5 எல்லை சோதனைச் சாவடிகளில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 19 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு துறை அலுவலர்கள், காவலர் துறையினர் என மொத்தம் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், ஓட்டுச் சாவடி மையங்களில் குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்தள பாதை, கழிவறை வசதிகள், மின்சார வசதிகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அருண் தம்புராஜ், மாவட்டம் முழுவதும் ஓட்டுச்சாவடி மையங்களை பார்வையிட்டு, அடிப்படை வசதிகளை செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தி வருகிறார். மேலும், ஓட்டுப்பெட்டிகள் வைக்கும் பகுதிகளையும் பார்வையிட்டு ஆலோசனை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று கடலுார் வேணுகோபாலபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, வன்னியர்பாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் தொடக்கப் பள்ளி மற்றும் செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ., மற்றும் பண்ருட்டி பகுதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களை பார்வையிட்டார்.
மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

