/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழை காலங்களில் மின் விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கடலுார் கோட்ட மின் ஆய்வாளர் தகவல்
/
மழை காலங்களில் மின் விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கடலுார் கோட்ட மின் ஆய்வாளர் தகவல்
மழை காலங்களில் மின் விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கடலுார் கோட்ட மின் ஆய்வாளர் தகவல்
மழை காலங்களில் மின் விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கடலுார் கோட்ட மின் ஆய்வாளர் தகவல்
ADDED : அக் 24, 2025 03:16 AM
கடலுார்: புயல், வெள்ள காலங்களில் மின்விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறையின் கடலுார் கோட்ட மின் ஆய்வாளர் லெட்சுமிபிரபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், கம்பங்கள், கேபிள்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் மின்மாற்றிகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடக்கக் கூடாது.
தாழ்வாக தொங்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். மின் ஒயர் இணைப்புகளை திறந்த நிலையில் இல்லாமல் இன்சுலேஷன் டேப் சுற்றி வெளிப்புற மின்காப்பு செய்யவும்.
மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும் எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
கேபிள் டி.வி.,ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நிலஇணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.
மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயரின் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். மின்கம்பத்திலோ, அவற்றைத்தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.
இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம். உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம், வீடு போன்ற பெரிய கட்டடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடைய வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை நிற்கக்கூடாது. டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
மின் கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில், உடனே அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டும் அல்லது மின் வாரியத்தின், 24 மணி நேர சேவைக்கான, 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

