மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து பயிற்சி
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து பயிற்சி
ADDED : ஜூலை 28, 2026 02:54 AM

விருத்தாசலம்: பூலாம்பாடி கிராமத்தில், மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வெளிவளாக பயிற்சி நடந்தது.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடந்த பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள்கள், அதிக மகசூல் தரும் உயர்தர ரகங்கள், விதை உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மையாக ஒவ்வொரு 10 வரிசைக்கும் 75 செ.மீ., இடைவெளி விட வேண்டும்.
இதனால் பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு ஏதுவாக அமையும். வரப்பு பயிராக கம்பு நேப்பியர் பயிர், ஊடுபயிராக உளுந்து மற்றும் பச்சைப்பயறு பயிரிட வேண்டும்.
அதுபோல், படைப்புழுக்களை கவர்ந்து இழுக்கும் இனக்கவர்ச்சிப்பொறி வைக்குமாறு வலியுறுத்தினார். மேலும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் பூச்சி நோய் மேலாண்மை குறித்து செயல்விளக்கப் பயற்சி அளிக்கப்பட்டது.
நல்லுார் வட்டார வேளாண் அலுவலர்கள், இப்கோ மற்றும் தனுக்கோ உர நிறுவனங்களின் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அப்போது, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். பூலாம்பாடி கிராம விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
