/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரை ரயில்கள்... நீட்டிக்கப்படுமா?
/
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரை ரயில்கள்... நீட்டிக்கப்படுமா?
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரை ரயில்கள்... நீட்டிக்கப்படுமா?
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரை ரயில்கள்... நீட்டிக்கப்படுமா?
ADDED : ஏப் 15, 2024 04:29 AM
கடலுார் : விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் அகல ரயில்பாதை துவங்கி 14 ஆண்டுகளை கடந்தும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படாதது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்தது. பின், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, 2010ம் ஆண்டு புதிய பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது, இந்த மார்க்கத்தில் பெங்களூரு உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டு, ஒரு சில பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
கடலுார் மாநகரில் பஸ் நிலையமும், ரயில் நிலையமும் அருகருகே உள்ளது, பொது மக்களுக்கு வேறு எங்கும் கிடைக்காத சிறந்த வாய்ப்பு. அதேப்போல முதுநகர் ரயில் நிலையம் ஜங்ஷனாக உள்ளது.
இவ்விரு வாய்ப்புகள் இருந்த போதும் நெடுந்துார ரயில்கள் வராததால் பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
நாகூர் - பெங்களூரு பாஸ்ட் பாசஞ்சர் ரயில் காலை 8:20 மணிக்கு முதுநகர் வந்து அங்கிருந்து பெங்களூர் செல்கிறது. அதேப்போல முதுநகர்-திருச்சி பாசஞ்சர் ரயில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு 10:30 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.
பெங்களூரு பாஸ்ட் பாசஞ்சர் ரயிலும், திருச்சி பாசஞ்சர் ரயிலும் முதுநகரில் இருந்தே செல்கின்றன.
இந்த ரயில்களை கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கம் பல முறை கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த பயனும் ஏற்படவில்லை.
அதேப்போல சேலம் - விருத்தாசலம் ரயில் தினமும் 2 முறை வந்து செல்கிறது. இந்த ரயிலை கடலுார் வரை நீட்டிக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தினர். ஆனால் அதுவும் நடைபெறவில்லை.
கடலுார் எம்.பி., யாக பதவி வகித்த அழகிரி, அருண்மொழித்தேவன், சிட்டிங் எம்.பி., ரமேஷ் ஆகியோர் இது தொடர்பாக சொல்லிக்கொள்ளும் விதத்தில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இது பொது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்ட மக்கள், புதிய ரயிலை இயக்க வேண்டும் என கேட்கவில்லை. விருத்தாசலம் வரை வந்து செல்லும் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை கூட நீட்டிக்க முடியவில்லை.
எனவே, கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்திய அரசிடம் புதிய ரயில் விடுவதற்கும், கடலுார் வரை ரயில்களை நீட்டிக்கவும் வாக்குறுதி அளித்து, நிறைவேற்ற முயற்சி செய்வார்களா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

