/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆணைவாரி வடிகால் ஓடை வாய்க்கால் துார்வாரப்படுமா?
/
ஆணைவாரி வடிகால் ஓடை வாய்க்கால் துார்வாரப்படுமா?
ADDED : ஜூலை 25, 2025 10:57 PM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி ஓடை வடிகால் வாய்க்காலை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த விளக்கப்பாடி ஏரியில் துவங்கி தட்டானோடை, தர்மநல்லுார், பெரியநற்குணம், வீரமுடையாநத்தம், சின்னகுப்பம் வழியாக ஆணைவாரி வடிகால் வாய்க்கால் உள்ளது.
மழை, வெள்ள காலங்களில் விளக்கப்பாடி ஏரியிலிருந்து வடியும் மழைநீர் தட்டானோடை, தர்மநல்லுார், வீரமுடையாநத்தம், சின்னநற்குணம் பகுதி வயல்களிலிருந்து வெளியேறும் உபரிநீர் ஆணைவாரி வடிகால் வாய்க்காலில் வடிந்து சேத்தியாத்தோப்பு வெள்ளாறுராஜன் வாய்க்காலில் விழுந்து 25 கண் மதகு வழியாக வெள்ளாற்றுக்கு செல்கிறது.
கடந்தாண்டு விருத்தாசலம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் தட்டானோடையில் துவங்கி சின்னகுப்பம் வரையும், சிதம்பரம் ஆணைவாரி போக்குவரத்து பாலம் வரை துார் வாரப்பட்டது.
ஆணைவாரி போக்குவரத்து பாலத்தில் துவங்கி ஓடை முகப்பு வி.கே.டி., சாலை முகப்பு துார்வாரும் பணி துவங்கி நிறுத்தப்பட்டது.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் வாய்க்கால் துார்வாராமல் புதர்மண்டி கிடப்பதால் மழைக் காலங்களில் வெள்ளம் ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வெள்ள பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு போர்க்கால அடிப்படையில் துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.