/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபைல் போன் டவரில் ஏறி 3 மணி நேரம் வாலிபர் போராட்டம்
/
மொபைல் போன் டவரில் ஏறி 3 மணி நேரம் வாலிபர் போராட்டம்
மொபைல் போன் டவரில் ஏறி 3 மணி நேரம் வாலிபர் போராட்டம்
மொபைல் போன் டவரில் ஏறி 3 மணி நேரம் வாலிபர் போராட்டம்
ADDED : நவ 13, 2025 07:06 AM
குள்ளஞ்சாவடி: மொபைல் போன் டவர் மீது ஏறி, 3 மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரால் குள்ளஞ்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதி ஆலப்பாக்கம் சாலையில் மசூதி எதிரே, 3 மொபைல் போன் டவர்கள் உள்ளன. அதில் உள்ள பழுதடைந்த மற்றும் செடி, கொடிகள் படர்ந்த, ஒரு டவரின் உச்சியில் நேற்று காலை, 7:00 மணிக்கு வாலிபர் ஒருவர் ஏறி நின்றார்.
தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், அந்த வாலிபருடன் சமாதானம் செய்தனர். அப்போது, தன்னுடைய பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அதை தன்னிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என அந்த வாலிபர் போலீசாரிடம் நிபந்தனை விதித்தார். மேலும், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் குழுவினர் வாகனத்துடன் சம்பவ பகுதிக்கு வந்தனர்.
போலீசாரிடம் மொபைல் போனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வாலிபர், கீழே இறங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் 10:55 மணிக்கு டவரில் இருந்து அந்த வாலிபர் கீழே இறங்கினார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் குள்ளஞ்சாவடி போலீசார் வாகன தணிக்கையின் போது, பள்ளிநீரோடை பகுதியை சேர்ந்த சிகாமணி மகன் பார்த்திபன், 24; என்பவரை கஞ்சா கடத்தியதால் கைது செய்தனர்.
அவர் தான் டவர் மீது ஏறி தன்னுடைய பைக்கை ஒப்படைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பார்த்திபனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக் கோர்ட் நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ளது.
அதனை போலீசார் மீட்டு தருவதாக உறுதியளித்ததை அடுத்து அவர் கீழே இறங்கினார். வருவாய்த்துறை மூலம் புகார் கொடுக்கப்பட்டால் டவர் மீது ஏறிய காரணத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

