/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பருவ மழைக்கு முன் தூர் வாரப்படும் கிணறுகள் :மழைநீர் சேகரிக்க பாசன விவசாயிகள் முன் ஏற்பாடு
/
பருவ மழைக்கு முன் தூர் வாரப்படும் கிணறுகள் :மழைநீர் சேகரிக்க பாசன விவசாயிகள் முன் ஏற்பாடு
பருவ மழைக்கு முன் தூர் வாரப்படும் கிணறுகள் :மழைநீர் சேகரிக்க பாசன விவசாயிகள் முன் ஏற்பாடு
பருவ மழைக்கு முன் தூர் வாரப்படும் கிணறுகள் :மழைநீர் சேகரிக்க பாசன விவசாயிகள் முன் ஏற்பாடு
ADDED : ஜூலை 26, 2011 12:05 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பருவமழைக்கு முன் கிணறுகளை தூர் வாரும் பணியில் பாசன விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழையை ஆதாரமாக கொண்டு விவசாய தேவைக்கு ஏற்ற தண்ணீர் சேமிப்பு நடந்து வருகிறது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் 686.89 மி.மீ., மழை சராசரியாக பெய்து வருகிறது. இந்த மழையை கொண்டு சுழற்சி முறையில் வேளாண் பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தின் நில அமைப்பை பொறுத்த வரையில் மேடு, பள்ளமாக இருப்பதோடு, பல இடங்கள் குன்றுகள் நிறைந்த மேட்டுப்பாங்கான பகுதியாக உள்ளது. மேட்டு பாங்கான பகுதிகளில் இறவை பாசனத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் பெய்யும் மழையை பொருத்து கடந்த காலங்களில் இறவை பாசன விவசாயம் செழிப்புற்று இருந்தது. கடந்த சில ஆண்டாய் இறவை பாசனத்துக்கு தேவையான நீர் தேவை குறைய துவங்கியுள்ளது. ஆண்டுக்கு, ஆண்டு நான்கு அடி முதல் ஆறு அடி வரையில் பூமிக்கடியில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்தாண்டு கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் கோடை வெயில் உக்கிரத்தினால், நிலத்தடி நீர் மட்டம் பல பகுதிகளில் குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு கடந்த இரு மாதங்களில் மழை கை கொடுக்காத நிலையில் பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய தாலுகாவில் நிலத்தடி நீர் மட்டும் குறைந்துள்ளது. இறவை பாசன கிணறுகள் அனைத்தும் வறண்ட நிலை ஏற்பட்டுள்ளது. பல விவசாயிகள் கிணற்று பாசன முறை இருந்த போதும், தற்போது விவசாய நிலங்களில் போர் அமைத்து பாசனம் செய்து வருகின்றனர். வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், இறவை பாசன விவசாயிகள் தற்போதே கிணறுகளை தூர் வாரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் தூர் வாரும் பணிக்கு தேவையான கூலி தொழிலாளர்கள் கிடைத்தனர். தற்போது, தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாகவும், நவீனமயமான விவசாய பொறியியல் முன்னேற்றம் காரணமாகவும் பெரும்பாலான விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் விவசாய பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். தூர் வாரும் பணிக்கு பயன்படும் கிரீன் மோட்டார் இயந்திரம் மூலம் கிணறுகள் தூர் வாரும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்கு பயன்படும் மோட்டாருக்கு தினசரி 650 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. (டீஸல் உள்ளிட்ட வாடகை). மோட்டார் மூலம் இயக்கப்பட்டு கிணற்றின் உள்ளே தோண்டப்படும் கல் மற்றும் மண்ணை பெரிய அண்டா வடிவத்தில் உள்ள பாத்திரத்தில் அள்ளி அதை மேலே கொண்டு வந்து கொட்டுவதற்கு மோட்டார் இயக்க கருவிகள் உதவுகிறது. மோட்டார் இயக்கவும், மண்ணை வெளியில் கொட்டவும் என இரு தொழிலாளர்களும், கிணற்றின் உள்ளே ஆறு பேர் வரையில் மண் தூர் வாரும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு கூலியாக ஒரு நபருக்கு 300 ரூபாய் வரையில் வழங்கப்படுகிறது. பூமியின் தன்மையை பொறுத்து ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 அடி வரையில் தோண்டப்படுகிறது. தற்போது, மாவட்டத்தின் இறவை பாசன பகுதி கிணறுகள் அனைத்தையும் விவசாயிகள் தூர் வாரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வரும் பருவமழையை குறி வைத்து விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டிருப்பதோடு, கடந்த காலங்களை போல் பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில் அடுத்தாண்டு மே மாதம் வரையில் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் இருக்க வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் நம்பிக்கையுடன் பணிகளில் களம் இறங்கியுள்ளனர்.

