/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கலெக்டரிடம் 5 குடும்பத்தினர் புகார்
/
ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கலெக்டரிடம் 5 குடும்பத்தினர் புகார்
ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கலெக்டரிடம் 5 குடும்பத்தினர் புகார்
ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கலெக்டரிடம் 5 குடும்பத்தினர் புகார்
ADDED : மே 20, 2025 02:39 AM
தர்மபுரி, மே 20
பாலக்கோடு அருகே கிராமத்தில், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக, கலெக்டரிடம், 5 குடும்பத்தினர் புகார் மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கூத்தாண்டஅள்ளியை சேர்ந்த மகேந்திரன், திருஞானசம்பந்தன், வெங்கடேஷன், மாதப்பன், குமரவேல் ஆகிய, 5 குடும்பத்தை சேர்ந்தவர்கள் நேற்று, மாவட்ட கலெக்டர் சதீஸ்யிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் ஐந்து குடும்பத்திற்கும், பங்காளியான மல்லன் குடும்பத்திற்கும் சொத்து பிரச்னையை தீர்ப்பதாக, ஊர் கவுண்டர் பூங்காவனம், முத்துசாமி, விஜி, முனிராஜி, நாகமணி, பூபதி, வேலாயுதம், அண்ணாமலை உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள், எங்களை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தனர். அப்போது, 75,000 ரூபாய் கட்ட வேண்டும், தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்போம் என, கண்டிஷன் போட்டனர். இதற்கு எங்கள் ஐந்து குடும்பத்தினரும் ஒத்துக் கொள்ளாததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தெரிவித்து, கோவில் திருவிழாவில் எங்களை சேர்த்துக் கொள்ளவில்லை.
மேலும், ஊரில் தண்ணீர் பிடிக்கக்கூடாது, பால் சொசைட்டியில் பால் வாங்கக்கூடாது என தடுத்து விட்டனர்.
சாலையில் செல்லும்போது எங்கள் மீது, டூவீலரில் ஏற்ற வருவதுடன், கொலை மிரட்டல் விடுக்கின்றனர். போலீசில் புகார் அளித்த போதிலும், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்து வருகின்றனர்.
கடந்த, 16ல் பொக்லைன் வாகனம் மூலம் நாங்கள் பயன்படுத்தும் கிராம சாலையில் பள்ளம் தோண்டி, வாகனம் செல்ல முடியாதவாறு தடுத்துள்ளனர். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.