ADDED : ஜன 17, 2025 01:22 AM
சித்தேரி மலையில் பொங்கல் விழா
அரூர், :அரூர் அடுத்த சித்தேரி மலையில், 62 கிராம பழங்குடியின மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ளது சித்தேரி மலை. கிழக்கு தொடர்ச்சி மலையில், 3,600 அடி உயரத்திலுள்ள சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. இங்கு, 20,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அழகூர் செக்கம்பட்டியில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில், போட்டமலையில் ஒரே கல்லில் ஆன பாறை மீது, கரியபெருமாள் வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. இது தரைமட்டத்தில் இருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பொங்கல் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு, பொங்கல் விழா விமர்சையாக நடந்தது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:சித்தேரி பஞ்.,ல், உள்ள, 62 கிராம மக்கள், 10- நாட்கள் விரதமிருந்து, தை மாதம், 3ம் நாள் கரிநாள் அன்று, சுவாமிக்கு பொங்கல் வைத்து, பூஜை செய்வதுடன், சுவாமியை துாக்கி மலை மீது சுற்றி வருவர். அப்போது, பெண்கள் கும்மியடித்து பாட்டு பாடுவர். விழாவில், ஏற்காடு, பச்சைமலை, கருமந்துறை, வத்தல்மலை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பங்கேற்பர். இக்கோவிலில், குழந்தை மற்றும் திருமணம் வரம் வேண்டி சென்றால், நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. பல தலைமுறைகளாக இந்த விழா நடந்து வருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.